துரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்

by எஸ். எம். கணபதி, Mar 2, 2020, 13:48 PM IST

கொல்கத்தாவின் அமித்ஷா பொதுக் கூட்டத்திற்கு முன்பாக நடந்த பாஜக பேரணியில் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்க என கோஷமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) எதிர்த்து, டெல்லியில் ஷாகின்பாக் என்னுமிடத்தில் 70 நாட்களுக்கு மேலாக முஸ்லிம்கள் குடும்பங்களுடன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 23ம் தேதியன்று, ஜாப்ராபாத் உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் இதே போல் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கின.
இதையடுத்து, டெல்லி பாஜக பிரமுகரும், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் தோற்றவருமான கபில் மிஸ்ரா என்பவர், சிஏஏ ஆதரவு போராட்டம் தொடங்கினார். அப்போது அவர், போராடும் முஸ்லிம்களை போலீசார் அகற்றாவிட்டால், நாங்களே அகற்றுவோம் என்று மிரட்டல் விடுத்தார். மேலும், அவரது பேரணியில் வந்தவர்கள், துரோகிகளைச் சுட்டு தள்ளுங்க(கோலி மாரோ சாலோன் கோ) என்று கோஷம் எழுப்பினர். டெல்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பாஜக பிரமுகர்கள் இதே கோஷங்களை எழுப்பினர்.

வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பாஜகவினர் மீது ஏன் எப்ஐஆர் போடவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எனினும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையினர், இது வரை எப்ஐஆர் போடவில்லை.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று(மார்ச்1) நடந்த சிஏஏ ஆதரவு பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், சிஏஏ சட்டத்தால் இந்தியச் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது. வெளிநாடுகளிலிருந்து வந்த இந்து, சீக்கிய, புத்த, சமண மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்குக் குடியுரிமை தரும் சட்டம்தான். இவர்கள் எந்த ஆவணமும் காட்டாமல் குடியுரிமை பெறலாம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்ப்பது, அரசியல் சட்டத்தை அவமதிப்பதாகும் என்றார்.

முன்னதாக, அமித்ஷா பொதுக் கூட்டம் நடந்த ஷாகித்மினார் மைதானம் வரை பாஜக பேரணி நடைபெற்றது. எஸ்பிளனேடு வழியாக நடந்த இந்த பேரணியில் சென்றவர்கள், துரோகிகளைச் சுட்டு தள்ளுங்க(கோலி மாரோ சாலோன் கோ) என்று கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, அந்த கோஷம் எழுப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மம்தா அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மேலும், பாஜகவுக்கு எதிராக ஒற்றுமை பேரணி நடத்தவும் அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், கோலி மாரோ கோஷம் எழுப்பியதாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.

You'r reading துரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர் Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை