முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான சட்டமன்ற வளாகத்தில் நடைபெறாமல், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்பட மறைந்த எம்.எல்.ஏ.க்கள், கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டா மாணவ, மாணவிகளின் பெயர்களையும் இரங்கல் தீர்மானத்தில் சேர்த்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இரங்கல் தீர்மானத்திற்கு பின்னர், சபை ஒத்தி வைக்கப்பட்டது. நாளையும், நாளை மறுநாளும் சட்டசபை கூடுகிறது. இதில், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை, நீட் ரத்து உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானங்களை அளித்துள்ளன. அவற்றில் எவை விவாதிக்கப்படும் என்று தெரியவில்லை.