அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் அமைப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பிரதமரை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் ஊடுருவி நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், சீன ஊடுருவல் விவகாரத்தில் ராகுல்காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து பல ட்விட்களை பதிவு செய்தார்.
ஜப்பான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான மோடியை சீனா பாராட்டுகிறது என்ற செய்தியை மேற்கோள்காட்டி பதிவு போட்டிருந்தார். அதில் ராகுல்காந்தி, சீனா நமது எல்லைக்குள் ஊடுருவி நிலத்தை பிடித்துள்ளது. சீனா நமது வீரர்களை கொன்றுள்ளது. ஆனால், இந்த தருணத்தில் சீனா ஏன் பிரதமர் மோடியை பாராட்டுகிறது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று வெளியிட்ட ட்விட் பதிவில், இந்தி பத்திரிகையில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார். அதில், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஊடுருவி ஒரு கிராமம் அமைப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல்காந்தி, பிரதமர் ஏற்கனவே சொன்னதை நினைவுபடுத்தி பாருங்கள். எனது தேசத்தை யாருக்குமே தலைவணங்கச் செய்ய மாட்டேன் என்று அவர் சொல்லியிருந்தாரே? என்று விமர்சித்துள்ளார்.