பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி கட்டி புறப்பட்டு சென்றது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து சொல்ல பல அமைச்சர்கள் தயங்கி மறுக்கின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது. ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மறுநாள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் அணிவகுத்தனர். திடீர் திருப்பமாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்து விட்டு சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(ஜன.31) காலை 10 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும், டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளவிருக்கிறார். இதற்காக அவர் பெங்களூருவில் ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கவிருக்கிறார். சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், மருத்துவமனையில் இருந்து அவர் ஏற்கனவே ஜெயலலிதா பயன்படுத்தி வந்த காரில் ஏறி(TN09-BX3377) வீட்டுக்கு புறப்பட்டார். அந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் வாய்ப்பே இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில், சசிகலா எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்கி விட்டு, தற்போது அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டப்படி சரியல்ல. அவர் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களையும் பயன்படுத்தக் கூடாது என்றார். இதற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதிலளித்தார். அவர் பேட்டி அளிக்கையில், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவே உள்ளார். அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் அதிமுக கொடியை பயன்படுத்துகிறார். இதில் ஒன்றும் சர்ச்சை இல்லை. சசிகலா தமிழ்நாட்டுக்கு திரும்பியதும் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்என்றார். இதைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நிருபர்கள் அதிமுக அமைச்சர்கள் பலரையும் தொடர்பு கொண்டு சசிகலா பற்றி பேட்டி எடுக்க முயன்றனர்.
ஆனால், ஒரு அமைச்சரும் அது பற்றி பேட்டி கொடுக்க முன்வரவில்லை. இந்த விஷயம் குறித்து பேச மாட்டேன் என்று ஒவ்வொரு அமைச்சரும் பின்வாங்கினர். அது மட்டுமல்ல. சசிகலா தொடர்பான விவாதத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டோம் என்று தொலைக்காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் கூறியுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் பேச்சிலும் கூட இதற்கு முன்பு போல் கடுமையே இல்லை. மழுப்பலாகவே அவர் பதிலளித்திருக்கிறார். இந்நிலையில், பிப்.7 அல்லது பிப்.9ம் தேதியன்று சசிகலா சென்னைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை பல ஊர்களில் தடபுடல் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர். சசிகலா சென்னைக்கு திரும்பியதும் அதிமுகவில் பல முக்கியப் புள்ளிகள் அவரை நேரில் சென்று சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.