டி.டி.வி.தினகரன்தான் கூவத்தூரில் எனக்கு ஊற்றிக் கொடுத்தான் என்று ஏகவசனத்தில் அவரை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டி தீர்த்திருக்கிறார். இதற்கு தினகரன் அளித்த பதிலில், அதிகாரப் போதை கண்ணை மறைக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் திருமண நிதியுதவி, தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று(பிப்.11) நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலா சிறைக்குச் செல்லும் போது டி.டி.வி.தினகரனிடம்தான் ஆட்சியையும், கட்சியையும் விட்டுவிட்டுச் சென்றார்.
ஆனால், அவர் என்ன செய்தார்? ஒரு மாதத்தில் கூத்தாடி, கூத்தாடி அதை உடைத்து விட்டார். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோனதுக்கு அவர்தான் காரணம். அதனால், சசிகலாவுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி.தினகரனிடம் இருந்து அவர் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. என்பது மூன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இனி ஒருபோதும் அந்த குடும்பத்தின் பிடியில் சிக்காது. சசிகலாவையும் தினகரனையும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது.இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.
அவர் பேசும் போது, தினகரனை அவன், இவன் என்று ஒருமையில் விளித்துப் பேசினார். கூவத்தூரில் அவன்தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தானா? ஊற்றிக் கொடுப்பதுதான் அவன் குலத்தொழில் என்று கடுமையாக விமர்சித்தார்.இதையடுத்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:
நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்!
இவ்வாறு டி.டி.வி. கூறியிருக்கிறார்.
இது குறித்து அதிமுக முக்கியப் புள்ளி ஒருவர் கூறுகையில், சசிகலா மிகவும் கெட்டிக்காரர். எந்த சமயத்தில் அமைதி காக்க வேண்டும், எப்போது ஓங்கி அடிக்க வேண்டும் என்பதை எல்லாம் ஜெயலலிதாவுக்கே அவர்தான் சொல்லிக் கொடுப்பார். இப்போது அவர் மீண்டும் அதிமுவுக்குள் வந்தால், தனது அதிகாரம் போய் விடும் என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருக்கிறார். அதன் காரணமாக, சசிகலா மீண்டும் நுழைந்து விடாமல் தடுக்க சி.வி.சண்முகத்தைத் தூண்டி விட்டு பெரிய சண்டையை உருவாக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இந்த ஆட்டத்திற்கு வராமல் மற்ற அமைச்சர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள் என்றார்.