அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது?

by எஸ். எம். கணபதி, Feb 15, 2021, 16:09 PM IST

அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டசபை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணிகளைப் பொறுத்தவரைக் கிட்டத்தட்ட நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கட்சிகளே இடம் பெறும் எனத் தெரிய வந்துள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, பாமக இந்த முறை திமுக கூட்டணிக்குப் போகும் என்று பேசப்பட்டது. அதற்கேற்ப பாமக நிறுவனர் ராமதாசும், அரசியலில் எந்த கட்சியும் எதிரியல்ல என்றும், விடுதலை சிறுத்தைகள் இடம் பெறும் கூட்டணியில் சேருவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக கூட்டணியில் தாங்கள் இருக்க மாட்டோம் என்ற ரீதியில் விளக்கம் கொடுத்தார். இதற்குப் பின்னர், திமுகவும், பாமகவும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். இதனால், பாமகவும் அதிமுக கூட்டணியில் நீடிப்பது உறுதியானது. எனினும், வன்னியர் இட ஒதுக்கீடு பிரச்சனையை எழுப்பி, ராமதாஸ் கூட்டணிக்கு நிபந்தனை விதித்து வந்தார். அதுகூட, சீட் பேரத்துக்காகத்தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று(பிப்.14) சென்னை வந்து அரசு விழாவில் பங்கேற்றார். அதற்கு பாமக, தேமுதிக கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் கலந்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கை மட்டும் முடிந்து விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிடுகிறதாம். பாமகவுக்கு 25, பாஜக 20, தேமுதிக 10, புதிய தமிழகம் 2 தொகுதிகள் என்று ஒதுக்கப்படுகிறதாம். பாஜக தொகுதியில் ஜான்பாண்டியனுக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக கடந்த முறை 227 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதி 7 தொகுதியிலும் கூட இரட்டை இலை சின்னத்தில் சிறிய கட்சிகள் போட்டியிட்டன.அதே போல், திமுக இந்த முறை 180 தொகுதிகளில் போட்டியிடப் போகிறதாம். காங்கிரசுக்கு 20, விடுதலை சிறுத்தைகளுக்கு 10, மதிமுக, இடது கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதாம். மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளுக்கு 6 தொகுதியும், மற்ற கட்சிகளுக்கு திமுக தொகுதிகளில் இருந்து ஒன்றிரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

You'r reading அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை