தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது .முட்டைகளுக்கான விற்பனை விலையைத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினமும் நிர்ணயம் செய்யும்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் சமீபகாலமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. நாமக்கல் பகுதியில் இருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பிற மண்டலங்களிலும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்குக் காரணம் என்கின்றனர் பண்ணை உரிமையாளர்கள்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 60 காசுகள் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு முட்டை சில்லறை விலை 4 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது .