10 லட்சம் ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் ரத்து.. சிஏஏ போராட்ட வழக்குகளும் ரத்து..

by எஸ். எம். கணபதி, Feb 19, 2021, 14:04 PM IST

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பொது மக்கள் மீது தொடரப்பட்ட 10 லட்சம் சிறுவழக்குகளும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் தொடரப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் கடைசியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழக அரசின் சார்பில் பல்வேறு சலுகை அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இன்று(பிப்.19) அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் துண்டுச்சீட்டு பார்த்து ஒரு அறிவிப்பை வாசித்தார்.

அவர் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் அதை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, காவல் துறையினர் அப்போது சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்தும், வாகன தணிக்கை செய்தும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கொரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவற்றில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள், இ-பாஸ் முறைகேடு வழக்குகள், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும். அதே போல், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் உள்ட முக்கிய குற்றவழக்குகள் தவிர மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

You'r reading 10 லட்சம் ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் ரத்து.. சிஏஏ போராட்ட வழக்குகளும் ரத்து.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை