மேற்கு வங்கத்தில் 13 இடங்களில் சிபிஐ ரெய்டு.. திரிணாமுல் கட்சிக்கு நெருக்கடி..

by எஸ். எம். கணபதி, Feb 19, 2021, 13:25 PM IST

மேற்குவங்கத்தில் திரிணாமுல் தலைவர்கள் தொடர்புடைய நிலக்கரி ஊழல் வழக்கில் 13 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சி மக்களிடம் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே பலமிழந்து விட்டன. பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.

மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். இதையொட்டி, திரிணாமுல் கட்சியில் இருந்து முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுத்து வருகின்றனர். இந்நிலையில், திரிணாமுல் தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ள சாரதா சிட்பண்ட் ஊழல், நிலக்கரி ஊழல் வழக்குகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் துரிதமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் திரிணாமுல் வினய் மிஸ்ராவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக புரூலியா, பாங்குரா, புர்துவான், கொல்கத்தா உள்பட 13 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று(பிப்.19) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது. மே மாதம் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக இந்த வழக்கில் திரிணாமுல் கட்சி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

You'r reading மேற்கு வங்கத்தில் 13 இடங்களில் சிபிஐ ரெய்டு.. திரிணாமுல் கட்சிக்கு நெருக்கடி.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை