காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதி போட்டியிடுவாரா? மு.க.ஸ்டாலின் பேட்டி..

by எஸ். எம். கணபதி, Feb 25, 2021, 10:00 AM IST

காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதிக்கு சீட் உண்டா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கேள்வி: கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் இல்லாதது திமுக, அதிமுகவுக்கு சவாலை ஏற்படுத்துமா? அ.தி.மு.க.வை நான் தி.மு.க.விற்கு சவாலானதாகக் கருதவில்லை. தேர்தல் களத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. கலைஞர் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது; அதே சமயம், அ.தி.மு.க. வலிமையான தலைமை இல்லாமல் தடுமாறி, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அடிமையாகி விட்டது.

கேள்வி: அதிமுக அரசு மீது ஊழல் புகார்களை கொடுத்துள்ளீர்கள். அதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளனவா?தி.மு.க. எப்போதுமே ஆதாரபூர்வமான ஊழல் புகார்களை மட்டுமே கொடுக்கும். முதலமைச்சர் பழனிசாமி மீது தி.மு.க. கொடுத்த ஒரு புகார், நெடுஞ்சாலைத்துறையில் தன் சம்பந்திக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது. இந்த ஊழல் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. ஆனால் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அதற்குத் தடைவாங்கி விட்டார். முதல் கட்டமாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு உள்ளிட்ட ஊழல் புகார்களை தமிழக ஆளுநரிடம் நானே நேரில் சென்று கொடுத்தேன்.

இப்போது இரண்டாவது ஊழல் பட்டியலையும் கொடுத்திருக்கிறோம். அப்போது எங்களின் முதல் ஊழல் புகார் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் கூறியிருக்கிறார். ஆதாரம் இருப்பதால்தானே புகார்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார். முறையான விசாரணை நடந்தால் இவற்றை நிரூபிக்க முடியும்.கேள்வி: கடந்த 1991-96ம் ஆண்டு அ.தி.மு.க. அரசின் மீது கொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் இதை எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?கடந்த 1991-1996 அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மிஞ்சி, ஊழலில் நம்பர் ஒன் அரசு, முதலமைச்சர் பழனிசாமியின் அரசுதான் என்பதை நிரூபித்து விட்டார். தமிழகத்தில் மட்டுமன்று, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதற்கு இணையான ஊழல் இல்லை. நாட்டிலேயே பழனிசாமிதான் அதிக ஊழல் புரிந்த முதலமைச்சர்.

கேள்வி: 2ஜி குற்றச்சாட்டு உள்ளிட்ட உங்கள் கட்சியினர் மீது கூறப்படும் புகார்கள் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?முதலமைச்சரும் – அவரது அமைச்சரவையினரும் தங்களின் மெகா ஊழல்களை மறைக்க திமுகவுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்! 2ஜி தொடர்பான வழக்கில் ஆதாரம் இல்லை என்று வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றமே கூறிவிட்டது. அந்தப் வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் - முதலமைச்சர் மீதும்தான் உள்ளன. அதுதான் அ.தி.மு.க.விற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தலில் படுதோல்வியைத் தரும்.

கேள்வி: எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது? தொகுதிப் பங்கீடுக்கான பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை. தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.கேள்வி: காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்?தேர்தல் அறிவிக்கப்பட்டப் பின்னர், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரோடும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர்களுடைய விருப்பங்களை அறிந்து, எங்களுடைய விருப்பங்களையும் எடுத்துரைத்து, சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெறும்.
கேள்வி : புதுச்சேரியில் தி.மு.க தனித்துப் போட்டியிட முடிவு செய்து, சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டாரா?புதுச்சேரியில் 1996 முதல் 2000 வரை மற்றும் பல்வேறு காலக்கட்டங்களிலும் பலமுறை திமுக ஆட்சி நடத்தி இருக்கிறது! ஆகவே தி.மு.க.வை வலுப்படுத்த முயற்சி எடுப்பதில் தவறு இல்லை. மற்றபடி புதுச்சேரியில் தி.மு.க. தனித்துப் போட்டி என்று யார் அறிவித்தது? இதுவரை அப்படியொரு முடிவை நாங்கள் அறிவிக்கவில்லை.

கேள்வி: தேர்தல் வியூக வகுப்பாளர்களிடம் ஆலோசனை கேட்பதை கலைஞர் இருந்தால் விரும்பியிருப்பாரா?அரசர்களின் அரசவையில் ஆலோசகர்கள் இருந்திருக்கிறார்கள். மத்திய அரசுக்கே பல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆலோசர்கள் தேவைப்படுகிறார்கள். அதுபோலவே, தேர்தல் களத்திற்காக பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக வைத்திருக்கிறோம். அவர் எங்களுக்குத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை - மற்ற கட்சிகளுக்கு எப்படி ஆலோசகர்கள் வழங்குகிறார்களோ அதே மாதிரி வழங்குகிறார். தி.மு.க. மட்டும் புதிதாக ஒன்றும் செய்து விடவில்லை!

கேள்வி: அரசியலில் குடும்ப அரசியலை தி.மு.க. ஊக்குவித்து வருகிறது என்ற அ.தி.மு.க.வின் குற்றச்சாட்டு?தமிழகத்தில் இப்போதுள்ள ஊழல் அரசு தமிழகத்திற்கு ஆபத்து. அதை ஆதரிக்கும் பா.ஜ.க. பேராபத்து. இதுதான் தமிழக மக்களின் முன்பு உள்ள முக்கியப் பிரச்சினை! அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். அதை நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் காண்கிறேன். அதனால், “வாரிசு அரசியல் என்ற துருப்பிடித்த வாதத்தை மீண்டும் கூர்மையாக்கி - அ.தி.மு.க. தங்கள் ஊழலை மறைக்கப் பார்க்கிறது. ஊழல் அ.தி.மு.க.வை ஆதரிப்பதை மறைக்க பா.ஜ.க.வும் முயற்சிக்கிறது. மற்றபடி உழைப்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க.வில் முதல் மரியாதை!

கேள்வி: இந்த முறை உதயநிதி தேர்தலில் போட்டியிடுவாரா?
இப்போதுதான் விருப்ப மனு கோரப்பட்டிருக்கிறது. விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு முறைப்படி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.கேள்வி: நீங்கள் வேல் பிடித்தது மதமா? அரசியலா?வேலும் வாளும் பழந்தமிழர்களின் படைக்கலன்கள். ; வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது, வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார். போரில் பயன்படுத்தும் படைக்கலன்கள் மற்றும் ஏர்கலப்பை ஆகியவற்றைத் தமிழர்கள் வழிபட்டனர் என்று அறியப்படுகிறது. பிரித்தாளும் சக்திகள் கடந்த காலத்தில்(ராமனின்) வில்லைப் பயன்படுத்தினர். அவர்கள் திடீரென்று அரசியலுக்காக வேலைப் பயன்படுத்துகின்றனர். தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள் என்ற புரட்சியாளர் மாவோவின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு ஸ்டாலின் பதில் கூறியுள்ளார்.

You'r reading காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதி போட்டியிடுவாரா? மு.க.ஸ்டாலின் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை