கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இயக்கத்தைச் சேர்ந்த தலா 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே நடந்துள்ளது. இதைக் கண்டித்து ஆலப்புழா மாவட்டத்தில் இன்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள வயலார் என்ற இடத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் நந்து கிருஷ்ணா (23). இவர் வயலார் பகுதியில் ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவராக இருந்து வந்தார். கடந்த சில தினங்களாகவே வயலார் பகுதியில் ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ தொண்டர்களுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் எஸ்டிபிஐ இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இதன் பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் குறித்து சிலர் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதைக் கண்டித்து ஆர்எஸ்எஸ் சார்பிலும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. அப்போது இரு அமைப்பைச் சேர்ந்த தொண்டர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இரு அமைப்புகளையும் சேர்ந்த 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களான நந்து கிருஷ்ணா மற்றும் நந்து (23 )ஆகிய இருவருக்குச் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நந்து கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். நந்துவுக்கு ஆபத்தான நிலையில் எர்ணாகுளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்ட எஸ்பி ஜெயதேவ் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆலப்புழா மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலப்புழா மாவட்டம் முழுவதும் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.