அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் வீடு, இலவச வாஷிங்மெஷின், ரேஷன்கார்டுக்கு மாதம் ரூ.1500 என்று பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அள்ளி விடப்பட்டுள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஏற்கனவே முதல்வர் அறிவித்தபடி அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்கட்டனம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். பால் விலையில் ரூ.2 குறைக்கப்படும்.
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும். அனைத்து வீடுகளுக்கும் இலவச அரசு கேபிள் சேவை வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும். ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். 100 நாட்கள் வேலை திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும். நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும். விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும். நகர பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும். கூட்டுறவுச் சங்கத்தில் வீட்டுக்கடன் நிலுவைத் தொகையை செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும். அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஒரு வருடமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.