மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 2 பேர் போட்டியிட மறுத்துள்ளனர். மேலும் வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. அங்கு பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். இதனால், திரிணாமுல் - பாஜக இடையே கடும் மோதல்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து கட்சி தாவிய முகுல்ராய், அதிகாரி உள்பட 22 பேருக்கு பாஜகவில் சீட் தரப்பட்டுள்ளது. மேலும், சவுரங்கி தொகுதியில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமந்திரநாத் மித்ராவின் மனைவி சீகா மித்ரா சவுத்திரி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், அவர் அதை மறுத்துள்ளார். நான் பாஜகவில் சேரவே இல்லை. என்னிடம் ஆலோசிக்காமல் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். நான் காங்கிரஸ் கலாச்சாரத்தில் வளர்ந்தவள். என்னால் பாஜகவில் சேர முடியாது என்று கூறியிருக்கிறார்.
திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய சுவெந்து அதிகாரியை சீகா மித்ரா சில நாட்களுக்கு முன்பு சந்தித்திருந்தார். அதையடுத்து அவர் பாஜகவில் சேர்ந்து விட்டதாக தகவல் பரவியது. அதை அவர் மறுத்துள்ளார்.
இதே போல், காசிப்பூர் பெல்காச்சியா தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தருண் சகாவும் தான் பாஜகவில் சேரவே இல்லை என்றும் தன்னிடம் கேட்காமல் வேட்பாளராக அறிவித்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். அவரும் போட்டியிட மறுத்துள்ளார். அவர் திரிணாமுல் கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான மாலா சாகாவின் கணவர் ஆவார்.
இதற்கிடையே, ஜெகத்தல் தொகுதி பாஜக வேட்பாளராக திரிணாமுல் கட்சியில் இருந்து வந்த அரிந்தம் பட்டாச்சாரியா அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்று நம்பியிருந்த பாஜகவைச் சேர்ந்த அருண் பிரம்மா கடும் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து நேற்றிரவு அந்த தொகுதி பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியில் இருந்து ஏராளமானோர் வெளியேறியதால், அந்த கட்சி கலகலத்து போயிருக்கிறது. இன்னொரு புறம், பாஜகவில் வேட்பாளர்கள் தேர்வில் பல குளறுபடிகள் காரணமாக அதுவும் கடும் போராட்டத்தில் உள்ளது. இதனால், தேர்தல் முடிவு மிகவும் இழுபறியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.