அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போர்க்கொடி.. 2 எம்.எல்.ஏ. சுயேச்சையாக போட்டி..

by எஸ். எம். கணபதி, Mar 19, 2021, 15:14 PM IST

அதிமுகவில் பல வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. 2 எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.


தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக, வி.சி.க, முஸ்லிம்லீக், ம.ம.க உள்ளிட்டவை இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக அணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது தவிர அ.ம.மு.க தலைமையில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், மக்கள் நீதிமய்யம் தலைமையில் சமக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
நான்கைந்து அணிகள் மோதினாலும் திமுக-அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளிலும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் பல இடங்களில் வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தி வெளிப்பட்டது. திமுகவில் கிட்டத்தட்ட அனைவரையும் சமரசம் செய்து விட்டனர். ஆத்தூர் தொகுதியில் திமுகவை எதிர்த்து ஜீவா ஸ்டாலின் அதிருப்தி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

அதேசமயம், அதிமுகவில் பல இடங்களில் வேட்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேந்தமங்கலம் தொகுதியின் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் சுயச்சையாக களம் இறங்கியுள்ளார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார். திருமயம் தொகுதியில் முன்னாள் அதிமுக ஒன்றியத் தலைவர் அழகு சுப்பையா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இது தவிர, வேலூர் அமைச்சர் நிலோபர் கபில் அமைச்சர் வீரமணிக்கு எதிராக ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். இதனால் வீரமணிக்கு எதிராக சிறுபான்மையின வாக்குகள் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி மற்றும் அதிமுக வழக்கறிஞர் ஒருவர், அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக திரும்பியுள்ளனர். அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் தனக்கு சீட் தராததால், அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி, ஆலங்குளம் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரியுள்ளனர். குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ.வுக்கு சீட் தராததால், அவரது ஆதரவாளர்கள் கடலூர் அமைச்சர் சம்பத் காரை அடித்து நொறுக்கினர். அதே போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது போடி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாளே ஒரு இடத்தில் அவருக்கு எதிராக பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் ஆவேசமாக குரல் எழுப்பி, பிரச்சாரத்தை தடுத்தனர். இந்த சூழல்களில் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் பலவிதமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

You'r reading அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போர்க்கொடி.. 2 எம்.எல்.ஏ. சுயேச்சையாக போட்டி.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை