மேளதாளம், குத்தாட்டம்.. நாற்று நட்டு, காய் விற்று.. வேட்பாளர்களின் நடிப்புகள்..

by எஸ். எம். கணபதி, Mar 25, 2021, 15:21 PM IST

சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில், வேட்பாளர்கள் வயலில் இறங்கி நாற்று நடுதல், பூப்பந்து விளையாடுதல், டீ போடுதல் என்று பல்வேறு வேலைகளில் இறங்கி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக 5 அணிகள் களத்தில் கடுமையாக மோதுகின்றன. திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம்தமிழர் என்று அணிகள் போட்டியிடுகின்றன.

இறுதி வேட்பாளர் பட்டியல்கள் வெளியான நிலையில், அனைத்து வேட்பாளர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் ஒவ்வொரும் ஆடல், பாடல், வியாபாரம், விளையாட்டு பல்வேறு வேடங்களை தரித்து ஓட்டு வேட்டையாடுகின்றனர்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று(மார்ச்25) காலையில் வாக்கிங் செல்வோரிடம் ஓட்டு கேட்டார். அப்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் பூப்பந்து விளையாடியவர்களிடம் ஓட்டு கேட்டார். தொடர்ந்து மைதானத்தில் இறங்கி அவர்களுடன் சில நிமிடங்கள் விளையாடினார்.

திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமார் தினம்தினம் ஒவ்வொரு தொழிலிலும் ஈடுபட்டு ஓட்டு கேட்கிறார். சொக்கம்பட்டியில் வயலில் நாற்று நடுபவர்களை பார்த்ததும் காரை விட்டு இறங்கிச் சென்று அவர்களிடம் ஓட்டு கேட்டார். பின்னர், தானும் வயலில் இறங்கி நாற்று நட்டார்.

இதே போல், ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மெய்யநாதன், வயலில் வேலை செய்பவர்களிடம் ஓட்டு கேட்டு விட்டு தானும் வயலில் இறங்கி நாற்று நட்டார்.
ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, துவரைவிளை பகுதியில் அய்யா வைகுண்டர்பதியில் தரிசனம் செய்து அங்கிருந்தவர்களிடம் ஓட்டு கேட்டார். அப்போது அவருக்கு தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தனர்.

முதுகுளத்தூர் நாம் தமிழர் வேட்பாளர் ரகமத் நிசா, மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்று ஓட்டு கேட்டார். வேட்பாளரும் ஊர்வலத்தில் சென்றவர்களும் முழுக் கரும்பை கையில் ஏந்தியபடி சென்று வாக்கு கேட்டனர். திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கடை வீதியில் பிரச்சாரம் செய்த போது, காய்கறி கடையில் தராசு பிடித்து காய் விற்றார். டீக்கடையில் டீ போட்டு கொடுத்தார்.

பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகரும், புரோட்டா கடையில் புரோட்டா சுட்டார், மட்டன் கடையில் இறைச்சி வெட்டினார். வந்தவாசி திமுக வேட்பாளர் அம்பேத்குமார் பிரச்சாரத்தின் போது பாட்டு பாடினார்.

இதே போல் பல வேட்பாளர்கள் பிரச்சாரப் பாடல்களுக்கு தகுந்தாற் போல் குத்தாட்டம் போட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

You'r reading மேளதாளம், குத்தாட்டம்.. நாற்று நட்டு, காய் விற்று.. வேட்பாளர்களின் நடிப்புகள்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை