Saturday, Apr 10, 2021

சீட் கிடைக்காதவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி.. திமுகவினருக்கு ஸ்டாலின் உறுதி..

by எஸ். எம். கணபதி Mar 25, 2021, 15:07 PM IST

திமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய பதவி தரப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தேர்தல் களத்தில் ஓய்வின்றி ஓடி ஆடி விழிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும், எல்லா திசைகளிலிருந்தும் நம்பிக்கை ஊட்டும் நல்ல செய்திகளே நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க.வுக்கு பெரும் ஆதரவான மக்களின் மனநிலை, அலையாக அல்ல, பேரலையாக எழுந்து உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்து தமிழகத்தை அனைத்து முனைகளிலும் பாழ்படுத்திய அ.தி.மு.க.வை அந்தப் பேரலை சுருட்டி தூர எறிந்துவிடும் என்பதைத் தமிழக மக்கள் எல்லா இடங்களிலும் நாள்தோறும் கழகத்திற்கு அளித்து வரும் கணிசமான ஆதரவின் வாயிலாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஊடகங்களில் - பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. இவையெல்லாம் நமக்கு, நமது உழைப்புக்கு, நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் அதே வேளையில், முன்பைவிட நாம் அதிகமான கவனத்துடன் உழைக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் இணைத்தே ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை. மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

கலைஞர் அவர்களை 6-ஆவது முறையாக முதலமைச்சராக அமர வைக்கும் வாய்ப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது வெறும் 1.1% வாக்குகள் வித்தியாசத்தில்தான் கை நழுவிப் போனது. ஒரு சில தொகுதிகளில் இருந்த அலட்சியத்தின் விளைவால், தமிழகம் அடிமை ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து சிக்கி பாழ்பட்டுக் கிடக்கிறது. எனவே, கருத்துக் கணிப்புகள் தருகிற உற்சாகத்தைவிட, உழைப்பின் மூலம் சேகரித்துச் செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும்தான் உண்மையான உற்சாகத்தை, ஊக்கத்தை வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியன்று வழங்கிடும். அதற்கேற்ப அயராது, எதையும் அலட்சியம் செய்யாது பணியாற்றிட வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிட விரும்பியும் வாய்ப்பு அமையாதவர்களுக்கு உரிய நேரத்தில் - உரிய வாய்ப்பினை கழகத் தலைமை நிச்சயம் வழங்கும். களத்தில் நிறுத்தப்பட்டிருப்பவரும் உங்களைப் போன்ற உடன்பிறப்புதான். அனைத்துத் தொகுதிகளிலும் கலைஞர் அவர்களே வேட்பாளர் என்ற திடசித்தத்துடன், வெற்றி முகடை நோக்கி ஒவ்வொரு நொடியும் உழைத்திட வேண்டும்.

ஓயாத பரப்புரைப் பயணத்திற்கிடையிலும், ஒவ்வொரு நாளும் கழகத்தவரின் களப் பணிகள் குறித்த விவரங்களை விசாரித்து அறிந்து வருகிறேன். அதுகுறித்த அறிக்கைகளை ஊன்றிப் படிக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் - அதற்குட்பட்ட ஒன்றிய - நகரப் பகுதிகளிலும் - வார்டுகளிலும் திறம்பட செயல்படும் நிர்வாகிகள், உடன்பிறப்புகள் ஆகியோர் குறித்து அறிந்துகொள்கிறேன். அதே நேரத்தில் அலட்சியம் காட்டுகிற ஒரு சில நிர்வாகிகள், ஒதுங்கி நிற்பவர்கள், பெயரளவில் செயல்படுபவர்களையும், கழகத்தின் வெற்றிப்பயணத்திற்கு வேகத்தடையாக இருப்போரையும் கவனித்தே வருகிறேன். அவர்கள் மிக மிகச் சிலராக இருந்தாலும், என் கவனத்திலிருந்து தப்ப முடியாது. கழகத்தின் வெற்றிக்கு உழைக்காவிடில், அதன் விளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும், அவர்களின் கட்சிகளுக்குரிய சின்னங்களில் போட்டியிட்டாலும் அங்கும் கழகமே போட்டியிடுகிறது என்கிற ஒற்றைச் சிந்தனையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியினை உறுதி செய்திடல் வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கழகம் போட்டியிடுகிற தொகுதிகளைவிடவும் சற்று கூடுதலான அளவில் ஒற்றுமையைக் காட்டி - உழைப்பினை செலுத்தி - தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

மத்தியில் ஆட்சி செய்யும் மதவாத - மக்கள் விரோத பா.ஜ.க.வும், மாநிலத்தைப் பாழாக்கிய ஊழல் - அடிமை அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்திருக்கின்றன. தமிழக மக்கள் அந்தக் கூட்டணியை முற்றாக நிராகரிப்பார்கள் என்பதைக் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. அதே நேரத்தில், ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து - அத்துமீறல்களில் - முறைகேடுகளில் ஈடுபட்டு தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட - குறைத்திட முனைவார்கள். கழகம் போட்டியிடும் இடங்களிலோ - தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலோ குழப்பங்களை உருவாக்கி, தற்காலிகமாகக் குளிர்காய நினைப்பார்கள். குன்றிமணி அளவுகூட அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. நமது வெற்றி இலக்கும் குறைந்திடக் கூடாது.
வெற்றிச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை, நம் உன்னதமான உழைப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது; நம் கண்களுக்கு உறக்கம் கிடையாது; நம் சிந்தனையில்-செயல்பாட்டில் சிறிதும் சோர்வு கிடையாது.

கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும். சிறு துளிகள் பெருகிச் சேர்ந்து கடலாவது போல, ஒவ்வொரு வாக்கும் கவனமாகச் சேகரிக்கப்படும்போது, வெற்றியின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும். அதனால், ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், நான் தொலைநோக்குத் திட்டம் எனும் தலைப்பில் அளித்துள்ள 7 உறுதிமொழிகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை செய்யுங்கள். அடிமை அ.தி.மு.க.வின் அவல ஆட்சியையும் - தேர்தல் நேரத்தில் கொடுத்துள்ள மோசடி வாக்குறுதிகளையும் அம்பலப்படுத்துங்கள்.

அலட்சியம் வேண்டாம்; ஒதுங்கி நிற்காதீர்; முன்னின்று செயல்படுங்கள். தோழமை சக்திகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பாடுபட்டு கண்டுள்ள விளைச்சலில், எந்தவித சேதாரமும் எக்காரணம் கொண்டும் இடையில் ஏற்பட்டுவிட அனுமதியாமல், முழு வெற்றியை அறுவடை செய்வதற்கு, கவனம் சிதறாமல் - கருத்தொன்றி உழைத்திடுங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading சீட் கிடைக்காதவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி.. திமுகவினருக்கு ஸ்டாலின் உறுதி.. Originally posted on The Subeditor Tamil

More Politics News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை