தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 177 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ்நவ் -சி வோட்டர்ஸ் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக 5 அணிகள் களத்தில் கடுமையாக மோதுகின்றன. திமுக அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி.க, ம.ம.க., கொ.ம.தே.க மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, ஓவைசி கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கமலின் மக்கள்நீதிமய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.க உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த 4 கூட்டணிகள் தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.
ஐந்து அணிகள் களம் கண்டாலும் திமுக, அதிமுக அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 3ம் இடத்தை பிடிப்பதில்தான் டிடிவி மற்றும் கமலுக்கு இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. திமுக 173 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் 15 தொகுதிகளில் உதயசூரியனிலுமாக 188 இடங்களில் உதயசூரியன் களத்தில் உள்ளது. திமுகவும், அதிமுகவும் 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வெளி வரும் கருத்து கணிப்புகளில் திமுகவே முன்னணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. புதிய தலைமுறை டி.வி. வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக 151 முதல் 158 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதிமுக 76 முதல் 83 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டது. டைம்ஸ்நவ் டி.வி. மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்புகள் நேற்று(மார்ச்24) வெளியிடப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டதாவது:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி 177 தொகுதிகளையும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 49 தொகுதிகளையும் கைப்பற்றும். டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க மற்றும் தேமுதிக கூட்டணி 3 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 5 இடங்களையும் பிடிக்கும்.
முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு ஸ்டாலின் 43.1 சதவீதம் பேர், எடப்பாடி பழனிசாமி 29.7 சதவீதம், சசிகலா 8.4 சதவீதம், கமல் 4.8சதவீதம், ரஜினி 1.9 சதவீதம், ஓ.பி.எஸ் 1.7 சதவீதம், ராமதாஸ் 1.4 சதவீதம், கே.எஸ்.அழகிரி 1.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.