இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகருக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சத்தை ரஃபேல் போர்விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் கொடுத்துள்ளதாக ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள ரஃபேல் போர் விமானத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடக்கத்திலிருந்தே எழுந்துள்ளன.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என 126 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதையடுத்து பாரதி ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. இதில் 126 விமானங்களுக்குப் பதிலாக ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என்று 36 விமானங்கள் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு செப்படம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இந்தநிலையில், ரஃபேல் விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இருப்பினும், டசால்ட் நிறுவனம் மீது அந்த நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. இதுகுறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் செய்தி வெளியான நிலையில் மோடி அரசின் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது.டெஃப்சிஸ் நிறுவனம் இந்தியாவில் டசால்ட் நிறுவனத்தின் துணை ஒப்பந்ததார நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.