அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே கை துப்பாக்கியை வைத்துக்கொள்கின்றனர். பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு இடையே நிகழும் சண்டையில் கூட துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்கின்றன.
அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 106 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி கூட தெற்கு கரோலினா மாகாணத்தில் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான பிலிப் ஆடம்ஸ் என்பவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கைத்துப்பாக்கிகள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சமூகத்துக்கு ஆபத்து என்று கருதப்படும் மக்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வழிவகை செய்யும் சிவப்பு கொடி சட்டத்தை உருவாக்கவும் நீதித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
துப்பாக்கி கட்டுப்பாடுகள் தொடர்பாக ஜோ பைடன் நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்த சில மணி துளிகளில் டெக்சாஸ் மாகாணத்தின், பைரன் நகரில் மர சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்த லாரி வின்ஸ்டன் பொலின் என்ற இளைஞர் சக தொழிலாளர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத்தள்ளியுள்ளார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.