கொடியன்குளம் கலவரம் - ஆப்ரேசன் வீனஸ் என்றால் என்ன.. நடந்தது எப்படி?!

Advertisement

கர்ணண் படம் வெளிவந்ததில் இருந்து கொடியன்குளம் கலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொடியன்குளம் கலவரம் குறித்து எவிடன்ஸ் கதிர் விரிவாக பேசியிருக்கிறார். அதன் தொகுப்பு தான் இந்த கட்டுரை.

தென்மாவட்ட சாதிக் கலவரங்கள் தொடங்கியது சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் இருந்த வீரசிகாமணி. இக்கிராமத்தின் அருகில் உள்ள வடநத்தம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். கட்டபொம்மன் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்தார். நடுவகுறிச்சி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது இவரது பேருந்தை சில மாணவர்கள் வழிமறித்து நிற்க அதை தட்டிக் கேட்டிருக்கிறார் தங்கவேல்.

அதன்பிறகு பேருந்து திரும்பி வருகிறபோது சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்திருக்கின்றனர். அந்த கும்பல் பேருந்தை உடைத்து சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் ஓட்டுனர் தங்கவேலுவை அரிவாளால் வெட்டி தாக்கினர். அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஓட்டுனர் தங்கவேல் தாக்கப்பட்டதை அறிந்த வடநத்தம்பட்டி மக்கள் வீரசிகாமணிக்கு புறப்பட்டனர். இரு தரப்பினருக்கு இடையே கல்வீசி தாக்குதல் நடந்தது. அப்போது மின்சாரம் இல்லை. ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது. சிலையை சேதப்படுத்திய கும்பலை பிடிக்கிறோம் என்கிற பெயரில் விடியற்காலை டிஎஸ்பி சின்னையா தலைமையில் போலீஸ் வடநத்தம்பட்டி கிராமத்திற்கு உள்ளே புகுந்து கடுமையாக தாக்குதல் நடத்தியது. கல்லூரி மாணவர்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் சிவகாசியில் மோதல் போக்கினை உருவாக்கியது. 30.07.1995 அன்று முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரனின் மண்ணெண்ணை குடோனிற்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்தப்பட்டது. சந்திரன் என்பவர் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட சந்திரனை அவரது சமூகத்தினர் காயத்துடன் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்ற போது அவர்களை தாக்கியது மட்டுமல்லாமல் முன் அறிவிப்பின்றி துப்பாக்கி சூடு நடத்தினர். சந்திரனுடன் சென்ற மக்கள் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் கல்யாண சுந்தரம் என்பவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர் குறிப்பாக டிஎஸ்பி சின்னையா, இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மீது குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து சேத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் 30.07.1995 அன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். இறந்து போன கணேசன் சிவகாசியை சேர்ந்தவர் என்று தவறுதலாக கருதி அந்த கும்பல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து 31.07.1995 அன்று திருநெல்வேலி, சிந்துபூந்துறையில் தடிவீரன் என்பவர் கொல்லப்பட்டார். அவரது நெஞ்சிலும் இடுப்பிலும் காலிலும் ஆழமான காயங்கள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து 1995 ஆகஸ்ட் 3 மற்றும் 4ம் தேதி புளியம்பட்டியில் பதட்டம் ஏற்பட்டது. நான்காம் தேதி இரவு காசமாடான் என்பவரது கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜபாண்டி, ராமன் ஆகியோர் வீடுகள் தீ வைக்கப்பட்டன. சண்முகத்தாய் என்பவரின் தேனீர் கடை நொறுக்கப்பட்டது.
புளியம்பட்டி அருகாமையில் உள்ள சீவலப்பேரியை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் கொல்லப்பட்டு புளியம்பட்டி கண்மாய் ஓரத்தில் அவரது உடல் கிடந்தது. புளியம்பட்டி சம்பவத்திற்கு பிறகு சீவலப்பேரி ஒரு சமூகத்தினர் வீடுகள் மீது குண்டு வீசப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 25.08.1995 அன்று ஆளந்தாவைச் சேர்ந்த பலவேசம் என்பவர் தனது மனைவியுடன் வயலுக்கு சென்று திரும்பும் போது மாடசாமி என்பவரோடு ஒரு கும்பல் ஒன்றிணைந்து பலவேசத்தை தாக்கி குத்தி கொலை செய்தது. அந்த வன்கொடுமை கும்பல் அங்கிருந்து சிங்கத்தாகுறிச்சிக்கு தப்பி ஓடிவிட்டது.
பலவேசம் கொலை அப்போதுள்ள வ.ஊ.சி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை ஆவேசமடைய வைத்தது. ஆளந்தாவில் உள்ள சில குறிப்பிட்ட சமூக மக்களின் வீடுகள் தாக்கப்பட்டன. வயல்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 27.08.1995 அன்று 43 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொடியன்குளத்தில் ஒன்று கூடி முக்கிய 3 முடிவுகளை எடுத்தனர். ஒன்று நடைபெற்ற சாதிய மோதல்களில் பாதிக்கப்பட்ட தம்முடைய சமூக மக்களுக்கு உதவி செய்வது, கலவரங்களில் கைதாகியுள்ள தான் சார்ந்திருக்கக்கூடிய மக்களை ஜாமீன் எடுப்பது, பின்னால் வரும் தாக்குதலை சமாளிக்க தங்களை முன்னெச்சரிக்கையுடன் பாதுகாத்து கொள்வது.
இதனைத் தொடர்ந்து காசிலிங்கபுரத்தில் 30.08.1995 அன்று அருணாச்சலம், சின்னத்துரை, ராஜா ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து 30.08.1995 அன்று மூவர் கொலையின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக பெரிய போலீஸ் படை காசிலிங்காபுரத்திற்குள் நுழைந்தது. போலீஸ் படை கிராமத்தின் உள்ளே புகுந்து அனைத்து பாத்திரங்களையும் அடித்து நொறுக்கினர். தொலைக்காட்சி பெட்டி, வானொலி பெட்டி, மின்விசிறி, இஸ்திரி போன்ற வீட்டு பொருட்கள் உடைக்கப்பட்டன. பலரையும் அடித்து காயம் ஏற்படுத்தினர். சிறுவர் சிறுமியர் உள்பட அனைவரும் போலீசாரால் தாக்கப்பட்டனர். போலீசாரின் தாக்குதலில் 63 வீடுகள் சேதமடைந்தன. 43 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆளந்தா கொலை வழக்கு சம்பந்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போலீஸ் அத்துமீறலை தொடர்ந்து 30.08.1995 அன்று புளியம்பட்டி அருகாமையில் உள்ள நாரைக்கிணற்றில் வெள்ளைத்துரை என்பவர் மீது குண்டு வீசப்பட்டது. அதில் அவர் கை ஒன்று துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மணியாச்சி, நாகர்கோவில் ரயிலில் வேலை முடிந்து திரும்பிய இரட்டை சகோதரர்கள் ராமன், லெட்சுமணனை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இதனைத் தொடர்ந்து 30.08.1995 அன்று புதிய முத்து என்பவர் வீட்டிற்கு திரும்பும் வழியில் வள்ளைநாட்டைச் சேர்ந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் புளியம்பட்டியில் இருந்து 2கி.மீ தொலைவில் உள்ள கொடியன்குளம் கிராமத்தில் தான் 31.08.1995 அன்று மிகப்பெரிய கலவரம் நடந்தது. கொடியன்குளம் கிராமத்தில் உள்ள மக்கள் பலர் அரபு நாடுகளில் வேலை செய்து பொருளாதார ரீதியாக பலமாக இருந்தனர். கொடியன்குளம் தாக்கப்படுதற்கு முன்பு ஆளந்தா, காசிலிங்கபுரம் ஆகிய இரண்டு ஊர்களும் போலீசாரின் கடுமையான அத்துமீறலால் கடுமையாக தாக்கப்பட்டன. ஆளந்தா, காசிலிங்கபுரம், கொடியன்குளம் மூன்றுமே ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறிய கிராமங்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில்குமார் சிங், துணை ஆட்சியர், ஒட்டப்பிடாரம் தாசில்தார் மற்றும் 600 போலீசார் கொடியன்குளம் சென்றனர். கிராம மக்கள் போலீஸ் படையை பார்க்க கூட்டமாக வந்தனர். ஊர் தலைவர் கணபதி போலீசாரை வரவேற்றார். ஆயினும் போலீசார் கணபதியை தாக்கினர். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இந்த தாக்குதலை பார்த்த பத்மா என்கிற இளம் பட்டதாரி போலீசாரை கேள்வி கேட்க, அவரது குரல்வளையை ஒரு போலீசார் பிடித்து நசுக்கினார். பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்தார் பத்மா.

இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் போலீஸ் மீது கல் எறிந்தார். போலீஸ் படை திட்டமிட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்ததால் கூட்டத்தை பார்த்து துப்பாக்கி சூடு நடத்தியது. மக்கள் போலீஸின் துப்பாக்கி சூட்டை கண்டு நான்கு பக்கமும் சிதறி ஓடினர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. ஒன்பது ரவுண்டு துப்பாக்கி சூட்டில் சிலர் காயமடைந்தனர். போலீஸ் தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மக்கள் சிதறி ஓடிவிட்டதனால் போலீசார் அரிவாள், கம்பு, இரும்பு கம்பி ஆகிய பொருட்களை கொண்டு வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி, வானொலி, இருசக்கர வாகன புத்தகங்கள், வங்கி புத்தகங்கள், நிலப்பட்டா, கல்வி சான்றிதழ்கள் ஆகிய முக்கியமான ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டனன.

சமைத்து வைத்திருந்த சோற்றில் கண்ணாடி துண்டுகளையும், உப்புகளையும், மண்ணெண்னையும் கலந்து நாசம் செய்தனர். வீட்டிற்கு வெளியே இருந்த செடிகளையும் பிடுங்கி நாசம் செய்தனர். ஊருக்கு பொதுவான குடிநீர் கிணற்றில் பெட்ரோல், டீசல், பூச்சி மருந்துகளை கலந்து பாழ்படுத்தினர். தெருவிளக்குகள் உடைக்கப்பட்டன. அம்பேத்கர், இமானுவேல் சேகரனின் படங்களும் உடைக்கப்பட்டு கிழித்து எறியப்பட்டன. தங்க நகைகள், கேமராக்கள், விசிஆர், தொலைக்காட்சி பெட்டி, கைக்கடிகாரம், சுவர் கடிகாரம், விலை மதிப்பு வாய்ந்த பொருட்கள் போலீசாரால் களவாடப்பட்டன.

அங்கிந்த பெண்களை சாதி ரீதியாக இழிவாகப்பேசி கேவலப்படுத்தினர். 42 பேரை கொடியன்குளத்தில் கைது செய்தனர். இதற்கு பெயர் ஆப்பரேசன் வீனஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. கொடியன்குளத்தில் கொலை குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களில் அடிப்படையில் தான் இந்த ஆப்பரேசன் வீனஸ் உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. போலீசாரின் இந்த இரக்கமற்ற கொடிய சித்திரவதையை கண்டித்து பல்வேறு தலைவர்கள் கொடியன்குளம் கிராமத்திற்கு சென்றனர். குறிப்பாக தியாகி இமானுவேல் பேரவை தலைவர் சந்திரபோஸ், தேவேந்திர குல வேளாளர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி (தற்போது புதிய தமிழகம்), காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி, குமரி ஆனந்தன், சிபிஎம் தமிழ்நாடு பிரிவின் செயலாளர் சங்கரய்ய, முன்னாள் யூனியன் அமைச்சர் அருணாச்சலம், காங்கிரஸ் எம்பி மேத்யூ போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இதனைத் தொடர்ந்து 05.09.1995 அன்று டிஜிபி வைகுந்த் சம்பவ இடத்திற்கு வந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் வந்த அமைச்சர்கள் கண்ணப்பன், முத்துச்சாமி. நாகூர்மீரான் ஆகியோரை மக்கள் சந்திக்க மறுத்தனர். ஆளந்தா, காசிலிங்கபுரத்தில் மிகக்கொடிய தாக்குதலை நடத்தினாலும் கொடியன்குளம் சம்பவம் பொது மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஒரு கொடிய போலீஸ் வன்முறையை யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனாலும் அதையும் மிஞ்சிய ஒரு வன்முறை 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி சங்கரலிங்கபுரத்தில் நடந்தது.

இதனைத் தொடர்ந்தும் தென்மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் நின்றபாடில்லை. தென்மாவட்ட சாதிக் கலவரத்தின் துவக்கம் 1995 – 1996 என்றாலும் அதன் உச்சம் 1997 – 2001 என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சாதிக் கலவரங்களை ஆய்விற்கு உள்ளாக்குகிற போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என்பதை கடந்து சாதிய துவேசத்தையும் அரசு எந்திரங்களின் அத்துமீறலையும் சமூகத்திற்கு கொண்டு வருவது முக்கியமான கடமையாகும்.

குறிப்பு: வருங்காலங்களில் நம்மை மறுபரிசீலனை செய்து கொண்டு நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்கிற அக்கறையில் தான் எந்த சமூகத்தின் சாதியையும் இங்கே குறிப்பிடவில்லை.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :

/body>