இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான படம் மண்டேலா. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் மண்டேலா படத்தை பார்த்து, ஐபிஎல் வீரர் ஒருவர் யோகி பாபுக்கு ரசிகராக மாறியிருப்பதாக கூறியிருந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி அந்த புது ரசிகர். இவர் சமீபத்தில் மண்டேலா படம் பார்த்து விட்டு ட்விட்டரில், ``இரண்டு நாட்களுக்கு முன்பு நெட்ஃபிக்ஸ் இல் மண்டேலா படம் பார்த்தேன். அதில் யோகி பாபுவின் நடிப்பைக் கண்டு வியந்தேன். அவர் என்ன ஒரு நடிகர். என்ன ஒரு கதை. யோகி பாபு நட்டுவின் நண்பர் என்பதை அறிந்தேன். நட்டு என்னை யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேச வைத்தார். நிச்சயம் எனக்கு ஃபேன் பாய் மொமெண்ட் அது" என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். கோஸ்வாமியின் இந்தப் பதிவு ரசிகர்களை தற்போது கவர்ந்தது.
அப்போதே நட்டுவுக்கும் யோகிபாபுவுக்கும் நட்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, தற்போது நட்டுவுடன் ஜாலியாக பேசியதை சொல்லியிருக்கிறார் யோகி. ``நடராஜன், வாஷிங்டன் சுந்தர் கூட அடிக்கடி பேசுவேன். ஒருமுறை நான் கிரிக்கெட் விளையாடுற வீடியோவைப் பார்த்துட்டு நடராஜன் எனக்கு போன் பண்ணி `அண்ணே... இந்தியா டீமுக்கு பேட்டிங் செய்ய ஆள் வேணும். வந்திடுங்கன்னு சொன்னார்.
நான் அங்க வந்துட்டா, இங்க என் வேலைய யார் பார்ப்பதுன்னு சொல்லிவிட்டேன். வாஷிங்டன் சுந்தர் சென்னை வந்த பிறகு நாம் மேட்ச் விளையாடுவோம் என்று கூறியுள்ளார். நாங்கள் அவ்வப்போது பேசிக்கொள்வோம்" என்று கூறியிருக்கிறார் யோகி!