`இவ்வளவு நாள் ஆலோசித்து தான் செய்தார்களா என்ன?... ஆக்சிஜன் சம்பவத்தில் உதயநிதி விமர்சனம்!

by Sasitharan, Apr 21, 2021, 20:44 PM IST

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மருத்துவ ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஐனாக்ஸ் ஆலை தான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. தமிழகத்தில் தேவைகள் இருப்பினும் அங்கே அனுப்பியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``தமிழகத்தில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டரை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த மத்திய அரசு, தமிழக அரசை கேட்காமல் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது இது குறித்து மத்திய அரசிடம் பேசுவோம்" என்றார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்திருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். ``தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?

மாநிலத்தில் அரசு என ஒன்று இருக்கிறது; அதனுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனையே மத்திய அரசுக்கு இல்லாமல் போனதற்கு அடிமைகளின் கையாலாகாத்தனமே காரணம். ஊழல் வழக்குகளில் தப்பிப்பதற்காக ஆரம்பம் முதலே மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் விளைவே இது.

அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள போது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு" என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

You'r reading `இவ்வளவு நாள் ஆலோசித்து தான் செய்தார்களா என்ன?... ஆக்சிஜன் சம்பவத்தில் உதயநிதி விமர்சனம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை