`வலிதாங்க முடியாமல் மனிதர் துடித்துப் போனார்!.. சீதாராம் யெச்சூரி அனுபவித்த நரக வேதனை!

by Sasitharan, Apr 22, 2021, 19:18 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருப்பவர் சீதாராம் யெச்சூரி. இவரின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி. 34 வயதான ஆஷிஸ் யெச்சூரி முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்கிடையில், ஆஷிஸ் யெச்சூரிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உயிரிழப்பு குறித்தும், சீதாராம் யெச்சூரி அனுபவித்த வேதனை குறித்தும் எம்பி சு.வெங்கடேசன் பேசியிருக்கிறார். அதில், ``சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக மேற்குவங்கம் சென்றபோது ஏற்பட்ட சிறுவிபத்தால் யெச்சூரிக்கு முதுக்குத்தண்டில் அடிபட்டது. அதற்காகத் தொடர்ந்து சிகிச்சைபெற்று ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமாகியது. ஆனால் அகில இந்தியப் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஐந்து மாநில சட்டமன்றப்பணிகளுக்காகத் தொடர்பயணத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தது. ஒரு வார ஓய்வுக்குப்பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த வாரம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்து, சென்னைக்கு வந்து கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தினூடேயே பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுவந்தார். கூட்டம் முடிந்ததும் டில்லி புறப்பட்டார். சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்ற விமானப்பயணத்தில் யெச்சூரியுடன் நானும் சென்றேன்.
அவரால், தான் கொண்டுவந்த சூட்கேஸைத் தூக்கி மேலே வைக்க முடியவில்லை. இரண்டு வரிசைக்கு அப்பால் இருந்த நான் உடனே வந்து உதவிசெய்தேன். அவருக்கு அருகில் இருந்த பயணியிடம் பேசி, எனது இருக்கைக்கு மாற்றி உட்கார்ச்சொல்லி நான் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டேன்.

விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கிய போது அந்த அதிர்வால் முதுகுத்தண்டில் ஏற்படும் வலிதாங்க முடியாமல் மனிதர் துடித்துப் போனார். அப்பொழுதுதான் அவரது முதுகுத்தண்டில் போடப்பட்டிருந்த கட்டினை தொட்டுப்பார்த்தேன். அதற்குப்பின் இரண்டரை மணிநேரப் பயணம். வலிபொறுக்க முடியாமல் அவரையும் மீறி முனகலோசை வெளிவந்துகொண்டே இருந்தது. தனது கைப்பையில் சிறு தலையணை ஒன்றைக் கொண்டுவந்திருந்தார். ஆனால் அது மட்டும் போதுமானதாக இல்லை. நான் விமானப்பணிப்பெண்ணிடம் பேசி மெதுவான போர்வையை வாங்கித் தந்தேன். இரண்டையும் முதுகுப்புறமாக வைத்து வலியைச் சற்றே குறைக்க முயன்றார். ஆனால் அதற்கெல்லாம் பலன் இருந்தது போல் தெரியவில்லை.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முதுகுவலிப் பிரச்சனைகொண்டவன். இரு சக்கர வாகனப் பயணத்தை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொலைதூர சாலைப்பயணத்தை மிகக்குறைத்துக் கொண்டேன். புகைவண்டிப் பயணம் மட்டுமே. முதுகுதண்டு உமிழ்நீரைப்போல வலியை விடாது சுரக்குங்தன்மை கொண்டது. யெச்சூரியின் அந்த முனகல் ஓசை எனது உடம்புக்குள் வலியாகவே பரவிக்கொண்டிருந்தது. முழுப்பயணத்தையும் நரகவேதனையை அந்த மனிதர் அனுபவித்துக் கொண்டிருந்தார். எதுவும் செய்ய முடியாமல் அருகில் இருந்தேன் நான்.

எனது எண்ணம் முழுக்க விமானம் ஓடுபாதையில் இறங்கும் பொழுது ஏற்படும் அதிர்வால் உருவாகும் வலியை எப்படி பொருத்துக்கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றியே இருந்தது. இதை எழுதும்போதும் கண்களில் நீர்பெருகுகிறது. நம்மை வசீகரித்த, நம்மை ஆட்கொண்ட தலைவர்களின் கண்களில் நீர்பெருகுவதைப் பார்க்கக் கிடைக்காதவனே பாக்கியவான். நான் அந்தப் பாக்கியமற்றவன். டில்லி விமானநிலையதில் இறங்கினோம். அவரது உடமைகளை அவரின் வாகனம் வரை கொண்டுசென்று வைத்து, அவரை ஏற்றி அனுப்பிவைத்தேன்.

உடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார், “இது போன்ற உதவிகளை இடதுசாரிகள் செய்யமாட்டீர்கள், உங்கள் தலைவர்கள் செய்யவும் அனுமதிக்க மாட்டார்களே? இப்பொழுது எப்படி....?” என்றார். நான் யெச்சூரியின் உடல்நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு அருகில் இருந்த தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் சொன்னார் “இந்தத் தியாகந்தான் தன்னலமற்ற தலைவர்களாக கம்யூனிஸ்டுகளை என்றைக்கும் வணங்க வைக்கிறது”.

நான் எனது வாகனத்தில் ஏறியவுடன், முதலில் தொலைபேசியில் அழைத்தது கே. பாலகிருஷ்ணன் அவர்களை. “இவ்வளவு மோசமான முதுகுவலியோடு இருக்கும் தோழரை, கோவை- திருப்பூர்- சேலம் - சென்னை என்று ஏன் பயணப்பட வைக்க வேண்டும்” என்று எனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினேன். 15 நாள்கள் கூட ஆகவில்லை. திண்டுக்கல் தொகுதி பிரச்சாரத்துக்கு மீண்டும் யெச்சூரி வந்தார். முதுகுத்தண்டு வலி 15 நாள்களில் சரியாகும் ஒன்றன்று. இன்னும் சொல்லப்போனால் முதுகில் போடப்பட்ட கட்டினைக்கூட பிரித்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்குள் நெடும்பயணம், வலி அந்த மனிதரை என்ன பாடுபடுத்தும் என்பதை நினைத்து உள்ளுக்குள் பதட்டத்தில் இருந்தேன்.

இம்முறை அவருக்கு உதவியாக அவரது மகன் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அதே நேரத்தில் வலியை அவர் எவ்வளவு உணர்ந்துகொண்டிருக்கிறார் என்பதும் புரிந்தது. ஆனால் இன்று காலை வந்த செய்தி நிலைகுலைய வைத்துவிட்டது. டில்லியில் கொரனோ - சிக்கிச்சையில் இருந்த அவரது மூத்த மகன் ஆசிஷ் இறந்துவிட்டார் என்று. என்ன சொல்வது, என்ன எழுதுவதென்று தெரியவில்லை. தன் மகனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி சொல்லிப்பதிவிட்டிருக்கிறார் யெச்சூரி. அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன். முதுகிலும் இதயத்திலும் ஆரா ரணம் இருந்தாலும் கடந்து பயணிப்பீர்கள். உங்களிடம் நாங்கள் கற்றது அதனைத்தான்" எனக் கூறியிருக்கிறார்.

You'r reading `வலிதாங்க முடியாமல் மனிதர் துடித்துப் போனார்!.. சீதாராம் யெச்சூரி அனுபவித்த நரக வேதனை! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை