ஐபிஎஸ் பதவி வேண்டாம் என்று கூறி பாஜகவின் பேச்சை நம்பி அரசியலில் குதித்தவர் தான் அண்ணாமலை. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டவர். 'ரஜினி கட்சி ஆரம்பித்தால் அண்ணாமலைதான் முதல்வர் வேட்பாளர்' என்றெல்லாம் அவரை வைத்து கிண்டலாகவும் சீரியஸாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வந்தன. அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே அரவக்குறிச்சி தொகுதியைக் குறிவைத்து பல வேலைகளை செய்யத் தொடங்கி இருந்தார்.
குறிப்பாக, வீ த லீடர் என்ற அமைப்பை இங்குதான் அவர் ஆரம்பித்தார். தொகுதி மக்களிடம் அறிமுகம் ஆக வேண்டும் என்பதற்காக கோலப்போட்டி, மராத்தான் ஓட்டம் போன்றவற்றை நடத்தினார். பா.ஜ.க-வில் சேர்ந்து, அக்கட்சியின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் தொகுதியில் இன்னும் கூடுதலாக பிரபலமானார்.
தன்னை அரவக்குறிச்சியில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று ஒற்றைகாலில் நின்றார். அவர் விரும்பியபடியே 2021 சட்டசபை தேர்தலில், அரவக்குறிச்சியில் போட்டியிட்டார். அதனை அனுமதித்தது பாஜக.1952 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் நடைபெற்று வந்த தேர்தல்களில் தி.மு.க. 5 முறை, அ.தி.மு.க. 5 முறை, காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும், முஸ்லிம் லீக் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இத்தகைய பின்னணி கொண்ட அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், கூட்டணி கட்சியான அதிமுக பலத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய அண்ணாமலையை எதிர்த்து திமுக சார்பில் மொஞ்சனூர் ஆர். இளங்கோ, மக்கள் நீதி மய்யம் சார்பில் முகமது அனீப் சாகில், நாம் தமிழர் கட்சி சார்பில் அனிஷா பர்வீன், அமமுக சார்பில் பி.எஸ்.என். தங்கவேல் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.
இருந்தாலும் அண்ணாமலைக்கும் திமுக வேட்பாளர் இளங்கோவுக்கும் இடையேதான் போட்டி பலமாக காணப்பட்டது. தொகுதியில் கணிசமாக இருக்கும் இஸ்லாமிய வாக்குகள் மற்றும் பட்டியலின வாக்குகள் தி.மு.க-வுக்கு ஆதரவாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது.
முன்னாள் ஐ.பி.எஸ் , இயற்கை விவசாயி பாஜக துணைத் தலைவர் இப்படி பல எதிர்பார்ப்போடு களமிறங்கிய அண்ணாமலை இறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் இளங்கோவை விட 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இதன் மூலம் அவர் கஷ்டப்பட்டு போட்டு வைத்த ஸ்கெட்ச் வீணாகிவிட்டது.