சென்னை மாநகரில் வசிக்கும் மக்கள், உரிய நேரத்தில் சொத்துவரியை கட்டத்தவறினால், வட்டியுடன் வசூலிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதவை, சட்டப்பேரவையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.
அதில், “உரிய காலத்திற்குள் சொத்துவரியை கட்டத் தவறுபவர்களுக்கு, வட்டி விதிக்கும் நடைமுறை தற்போது இல்லை. 4-ஆவது மாநில நிதி ஆணையம், சொத்து வரியை காலம் தாழ்த்தி செலுத்துவோருக்கு, வட்டி விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆய்வு செய்யுமாறு, அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, அதை ஏற்பது என முடிவு செய்துள்ளது."
“அதற்கேற்ப, 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, இந்த மசோதா வழிவகை செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சொத்துவரியை கால தாமதமாக செலுத்துவோருக்கு வட்டி விதிக்கப்பட இருக்கிறது. வட்டி அளவு எவ்வளவு, எப்போதில் இருந்து இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் என்பது குறித்து, அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த சட்ட திருத்த மசோதா, பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளன்று விவாததித்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.