மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடளுமன்ற மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்தன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இரவு 11 மணியளவில் தொடங்கியது.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். முதலில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து அடுத்ததாக மின்னனு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர்.
இதனால், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்பிற்கு பிறகு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை திங்கள் வரை ஒத்திவைத்தார்.
முன்னதாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல மாறாக எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு என்றார்.
மேலும், அதிகப்படியான உறுப்பினர் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நாங்கள் இங்கு வரவில்லை என்றும் மக்களின் ஆசிர்வாதத்தோடு வந்திருப்பதாகவும், பெரும்பான்மையோடு இருப்பதால் இது பாஜக-வுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பாக” இருப்பதாக மோடி கூறினார்.