துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பா.ஜ.க சேவகர் போல் மாறியதால் தான் ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சராக இருந்த அவரை மாற்ற நேரிட்டது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி உடல் நிலை சரியில்லாமல், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மேல் சிகிச்சைக்காக,சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் கொண்டு வரப்பட்டார். இந்த தகவலை பன்னீர்செல்வம் வெளியே சொன்னதால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன், "'அமைதிப்படை' பன்னீர்செல்வம் மிஸ்டர் க்ளீன், பெரிய தலைவர் என்றெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டது. பன்னீர்செல்வம் பாஜக சேவகர் போல மாறியதால் தான், ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, முதலமைச்சராக இருந்த அவரை, மாற்ற வேண்டியதாயிற்று" எனக் கூறினார்.
"பன்னீர்செல்வம் ஒன்றும் இல்லை என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். அது தற்போது வெளிப்பட்டுள்ளது. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே காட்டி கொடுத்தவர், இவர்களை காட்டி கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும். காப்பாற்றியவர்களுக்கு துரோகம் செய்வது தான் பன்னீர்செல்வத்தின் இயல்பு" என அவர் விமர்சித்துள்ளார்.
"இது தெரியாமல் அரிச்சந்திரன், காந்தி பேரன், தியாகி போல பன்னீர்செல்வத்தை காட்டுகின்றனர். தெய்வம் என்று யாரை கூறினாரோ அவர் மரணத்தையே கொச்சைப்படுத்தியவர் பன்னீர்செல்வம். விசாரணை ஆணையம் அமைக்க காரணமாக இருந்தவர். அவர் செய்த பாவங்கள் அவரை விடாது. இன்னும் தொடரும்" என தினகரன் கூறியுள்ளார்.