புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மாநில அரசா..? ஆளுநர் அதிகாரமா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இவ்விகாரம் குறித்துப் பேசுகையில், “துணை நிலை ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உண்டு. நாங்கள் அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவதுதான் துணை நிலை ஆளுநரின் வேலை” தீர்க்கமாகக் கூறினார்.
மேலும், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்றும் இதற்காக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கும் பயணமானார் முதல்வர் நாராயணசாமி. ஆனால், மீண்டும் வார்த்தைப் போர் தொடங்கியுள்ள ஆளுநர் கிரண்பேடி, "புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் விரும்பவில்லை.
தனி மாநில அந்தஸ்து குறித்து நாடாளுமன்றத்தில்தான் முடிவெடுக்க முடியும். நியமன எம்எல்ஏ-க்களை பேரவைக்குள் அனுமதிக்காவிடில் சட்டச்சிக்கலை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.