அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிக்கொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டு நிறுவனமான ஏடிஆர் உடன் 72-600 ரக பயணிகள் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஏற்கெனவே 8 விமானங்கள் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அந்நாட்டின் உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா வித்தித்துள்ள பொருளாதார தடைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தடைக்கு ஒரு நாள் முன்னதாக ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஐரோப்பாவிடம் இருந்து 5 ஏடிஆர் 72-600 ரக விமானங்களை ஈரான் வாங்கியுள்ளது.
குறிப்பிட்ட 5 பயணிகள் விமானங்களும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் வந்தடைந்ததாக ஈரான் சாலை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அப்பாஸ் அகோவ்ந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிடையே ஈரானுக்கு உள்ள நல்லுறவு, அமெரிக்காவின் பொருளாதார தடையினால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என அப்பாஸ் தெரிவித்தார்.