தமிழக முதல்வர் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Aug 6, 2018, 09:18 AM IST

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாணவர்களிடம் இருந்து கோடி கணக்கில் பணம் பெற்ற தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. மதிப்பெண் மோசடி தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா உள்ளிட்ட 3 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது “மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல்” நோயை அடையாளம் காட்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் விதவிதமான முறைகேடுகளும் அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை எப்படி சீரழிந்துவிட்டது என்பதை உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து உள்ளனர் என்றும், அவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் வெளிவந்துள்ள செய்திகள் பல்கலைக்கழகத்தின் நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கமாக விண்ணப்பிக்கும் “மறு மதிப்பீட்டின்” மீது மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இந்த தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்பது அதைவிட கொடுமையான செய்தியாக இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான் என்றாலும், அந்த மறுமதிப்பீட்டு முறையில் ஒரு விடைத்தாளுக்கு ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண்கள் போட்டிருப்பதும், ஒரு விடைத்தாளுக்கு 70 மதிப்பெண்கள் வரை மறு மதிப்பீட்டில் அளித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், விடைத்தாள் அச்சடிப்பதில் ரூ.60 கோடி ஊழல் என்றும் வரும் செய்திகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவித்திருக்கிறது.

ஆகவே, உலக அளவில் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உயர் கல்வித்துறைக்கு இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள வழக்கின் விசாரணை அதிகாரியாக ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை நியமித்து, ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு “துணை வேந்தர்கள் அடங்கிய குழு” ஒன்றினை அமைத்து மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர்கல்வியின் தரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading தமிழக முதல்வர் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை