கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குக.. வைகோ வேண்டுகோள்

ருணாநிதிக்கு பாரத ரத்னா விருது - வைகோ வேண்டுகோள்

Aug 11, 2018, 12:29 PM IST

தமிழர்களின் சகாப்த நாயகர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அக்கட்சி எம்.பி. திருச்சி சிவா, நாட்டின் முக்கியமான தலைவராக விளங்கிய கருணாநிதி 95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில், 80 ஆண்டுகால வாழ்வை பொது வாழ்வுக்காக அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கருணாநிதி பாடுபட்டார்.

எழுத்தாளர், பேச்சாளர், வசனகர்த்தா எனப் பன்முகக் கலைஞரான அவருக்கு, பாரத ரத்னா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும்" என மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, வைகோவும் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர், கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார்கள்.

ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் அணைந்து போனது. ஓயாத கடல் அலை போல உழைத்துக் கொண்டிருந்த ‘தமிழர்களின் சகாப்தம்’ தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.

இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்த மக்கள் தலைவர் கலைஞர் ஒருவரே என்றால் அது மிகையல்ல.

மேடையில் வீசிய மெல்லியப் பூங்காற்றாய், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவர், தன் ஈடற்ற எழுத்து வன்மையால் தமிழ் அன்னைக்கு முத்தாரங்கள் பலவற்றை அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்த வித்தகப் பெருமகன் கலைஞர்.

Vaiko

வான்புகழ்கொண்ட வள்ளுவரின் குறளுக்கு அவர் தீட்டிய ‘குறளோவியம்’ தமிழரின் தொன்மைச் சிறப்பை இயம்பும் ‘தொல்காப்பியப் பூங்கா’ தமிழ் இனத்தின் பழைய பண்பாட்டின் புதிய வடிவத்தை கண்முன் நிறுத்தும் ‘சங்கத் தமிழ்’ கடலாண்ட தமிழனின் வரலாற்றைக் கூறும் ‘ரோமாபுரிப் பாண்டியன்’ தமிழ் மண்ணின் வீரம் மணக்கும் ‘தென்பாண்டிச் சிங்கம்’ ‘பொன்னர் சங்கர்’ போன்றவை தலைவர் கலைஞரின் சாகாவரம் பெற்ற இலக்கியப் படைப்புகள் ஆகும்.

தமிழ்த் திரைஉலகில் பேனா முனையில் புரட்சிகர வசனங்கள் தீட்டி, வண்ணத் தமிழுக்கு மேலும் அணிசேர்த்து காவியப் புகழ் கொண்டவர் கலைஞர். ஐந்துமுறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, மக்கள் பணி ஆற்றிய தலைவர் கலைஞர், ஆட்சித் துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்.

இந்திய ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப்பேரவையில் ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கலைஞருக்கு மட்டுமே உரியது ஆகும்.

திராவிட இயக்கத்தின் ஆணி வேரான ‘சமூக நீதி’ தழைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

செம்மொழித் தமிழுக்கு சிறப்பான திட்டங்களால் பெருமை சேர்த்தவர். எண்ணிலடங்கா சமூக நலத் திட்டங்களுக்கு முன்னேடியான மாநிலம் தமிழ்நாடு என்ற கீர்த்தி தலைவர் கலைஞரால்தான் கிடைத்தது.

பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கிட சட்டம், வேளாண்மை செழிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சி, தொழில் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, இவையெல்லாம் கலைஞரின் ஆட்சித் திறனுக்கு சான்று கூறும் சரித்திரச் சாதனைகள் ஆகும்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ கொணர்ந்த பெருமை கலைஞரையே சேரும்.

இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு இந்திய அரசு ‘பாரத் ரத்னா' விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குக.. வைகோ வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை