வரலாறு காணாத கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் கேரள மாநிலம் நிர்மூலமாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அம்மாநிலத்தில் உள்ள 24க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. 26 ஆண்டுகளுக்கு பிறகு முழுக்கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணையின் 5 மதகு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக முல்லைபெரியாறு அணை 136 அடியை எட்டியுள்ளது.
கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட 500 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான, உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. வீடுகள், சாலைகள், வணிக நிறுவனங்கள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
மழை தொடர்வதால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் பாதித்த இடங்களில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்பு மற்றும் தேசிய பேரிடர் குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை ஹெலிகாப்டரில் சென்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பார்வையிட்டார். எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உடன் சென்றார். வயநாடு மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதனை தொடர்ந்து, கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
மேலும் அவர், வீடு மற்றும் நிலத்தை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ள பாதிப்பை சமாளிக்க போராடி வரும் கேரள மாநில அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் உதவி கரம் நீட்டி வருகிறது.