தி.மு.க தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தம் பக்கம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மெரினாகடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி நினைவிடத்தில், அவரது மகன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பேசிய அவர்,"எனக்குள்ள ஆதங்கத்தை தந்தையிடம் வெளிப்படத்தினேன், கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னை ஆதரிக்கின்றனர். இதற்கு காலம் பதில் சொல்லும்"
"எனது ஆதங்கம் எல்லாம் குடும்பத்தை பற்றியதல்ல, கட்சியை பற்றியது தான். தற்போது கட்சியில் இல்லாததால், செயற்குழு மற்றும் பொதுக்குழு குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை" என அவர் கூறினார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு மீண்டும் கட்சியில் ஆதிக்கம் செலுத்த தயாராகி வருதை அழகிரியின் இந்த அதிரடி பேச்சு வெளிப்படுத்துவது போல் இருப்பதாக கருதப்படுகிறது.
கட்சி மற்றும் குடும்ப பிரச்சினைகளால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மு.க.அழகிரி தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.