அதிமுக நலனுக்காக பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
அதிமுக செயற்குழுவில் கலந்து கெண்டு பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், "16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தின் 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து, வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அது தான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி."
"அதற்காக நான் உள்பட மூத்த நிர்வாகிகள் பதவியை துறக்க தயார். மூத்த அமைச்சர்கள், பதவியை துறந்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட தயாராக வேண்டும் என்றும் இதற்கு முன்னுதாரணமாக கட்சியின் வளர்ச்சிக்காக துணை முதலமைச்சர் பதவியையும் துறக்கத் தயார். ஆட்சியைவிட கட்சி தான் நமக்கு முக்கியம்" என பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
அதேபோல டெல்லியில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், "அந்த சம்பவத்தை அவமானமாக கருதுவதாகவும், அந்த அவமானம் பன்னீர்செல்வம் என்ற தனிமனித ஏற்பட்ட அவமானம் அல்ல, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருக்கு ஏற்பட்ட அவமானம்"
"தன்னுடைய தம்பிக்கு மருத்துவ உதவிக்கு ஹெலிகாப்டர் கொடுத்து உதவிய நன்றி கடனுக்காக அந்த விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை" என தன்னுடைய ஆதாங்கத்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொட்டித் தீர்த்தார்.