இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை குழிதோண்டி புதைப்பதற்கான ஆயுதமாக கிரீமிலேயர் பயன்படுத்தப்படக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த வகையிலும் சமூகநீதி கிடைத்து விடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர் என்பது அவர்கள் கடைபிடித்து வரும் கொள்கைகளின் மூலம் மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான விதியால் 29 பேருக்கு இ.ஆ.ப, இ.கா.ப அதிகாரிகளாகும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு முழுமையானதாக இல்லை. ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளவர்கள் கிரீமிலேயர்களாக, அதாவது வசதி படைத்தவர்களாக, கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இந்த அநீதி ஒருபுறமிருக்க, கிரீமிலேயர்களை கணக்கிடுவதில் மத்திய அரசு இழைக்கும் பெரும் அநீதி காரணமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகளின்படி மத்திய, மாநில அரசுகளில் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப் படுவதில்லை. மத்திய, மாநில அரசுகளின் சி மற்றும் டி பிரிவு பணிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கிடப்படாது; அதேநேரத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும்.
அதன்படி பார்த்தால், சி மற்றும் டி தொகுதி பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பெற்றோர் இருவரும் இப்பணிகளில் இருந்து ரூ.1.30 லட்சம் மாத வருவாய் ஈட்டினாலும் கூட அவர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள்; ஆனால், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பெற்றோர் இருவரும் தலா ரூ.35,000 மாத வருவாய் ஈட்டினாலே அவர்களின் வாரிசுகள் கிரிமீலேயராகக் கருதப்பட்டு ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில் தான் 2017-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 பேருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட முன்னணி வரிசை பணிகள் மறுக்கப்பட்டுள்ளன. இவர்களின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதால் அவர்களின் வருமானமும் கணக்கில் சேர்க்கப்பட்டு, 29 பேரும் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருக்கிறது. சமூக நீதியை இதைவிடக் கொடூரமாக யாராலும் படுகொலை செய்ய முடியாது.
இதில் கொடுமை என்னவென்றால் இத்தகைய நடைமுறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து இருப்பது தான். கடந்த 2016-ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வுகளில் இத்தகைய நடைமுறையால் பாதிக்கப்பட்ட சிலர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அவ்வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த தில்லி உயர்நீதிமன்றம், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் ஈட்டும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இந்த விதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அதற்கேற்ற நிலையிலான பணியை வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், 2016-ஆம் ஆண்டில் பாதிக்கப்படோருக்கு இந்தத் தீர்ப்பின்படி இடஒதுக்கீடு வழங்காத மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2017-ஆம் ஆண்டிலும் அதே முறையைப் பின்பற்றி 29 பேருக்கு ஓ.பி.சி இடஒதுக்கீட்டை வழங்க மறுத்திருக்கிறது.
கிரீமிலேயரைக் கணக்கிட மத்திய அரசு கடைபிடிக்கும் முறை செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்து தடை வாங்கியது. ஆனால், தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை பெறப்படாத நிலையில், அத்தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது சரியல்ல.
மத்திய அரசின் இந்த தவறான நிலைப்பாட்டால் 2015-ஆம் ஆண்டில் 11 பேருக்கு இ.ஆ.ப., இ.கா.ப பணியும், 120 பேருக்கு பிற பணிகளும் மறுக்கப்பட்டன. 2012-ஆம் ஆண்டில் 12 பேரும், அதற்கு முன் நால்வரும் இ.ஆ.ப., இ.கா.ப பணிகளை இழந்துள்ளனர். மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டும் மத்திய அரசுப் பணிகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இன்னும் 7 விழுக்காட்டைத் தாண்டவில்லை.
அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு ஆள்தேர்வு நடத்துவதற்கு பதிலாக கிடைக்கும் வாய்ப்புகளையும் கிரீமிலேயரைக் காட்டி பறிப்பது என்பது பட்டினியால் வாடும் ஏழைக்கு வலது கையால் பரிமாறப்பட்ட உணவு வகைகளை இடது கையால் எடுத்து வீசும் பாவத்திற்கு இணையான செயலாகும்.
இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியை தீர்மானிப்பதில் பொருளாதார அளவுகோல் கூடவே கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எந்த வித பொருளாதார நிலையில் இருந்தாலும் அவர்களின் சமூக நிலை மாறுவதில்லை என்று உரத்தக் குரலில் வாதிட்டு வரும் மத்திய அரசு, அந்த சரியான நிலைப்பாட்டை பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கிரீமிலேயர் விவகாரத்தில் கடைபிடிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்; இது பச்சை துரோகமல்லவா?
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை குழிதோண்டி புதைப்பதற்கான ஆயுதமாக கிரீமிலேயர் பயன்படுத்தப்படக்கூடாது. எனவே, பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.