மேகாலயா மாநிலம் தெற்குதுரா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கான்ராட் சங்மா முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜக மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, கடந்த மார்ச் 6ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.
முதலமைச்சராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக அவரது சகோதரி அகதா சங்மா, தெற்கு துரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், முதலமைச்சர் கான்ராட் சங்மா 8,420 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தனது முதலமைச்சர் பதவியை எந்தவித சிக்கலும் இன்றி தக்க வைத்துக்கொண்டார்.