முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், கடந்த, ஜூன் 21-ஆம் தேதி திமுக சிறுபான்மையினர் அணி மாநில ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற அப்போதைய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாகக் கூறி, கடந்த ஜூலை 11ஆம் தேதி, திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சம்பத் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் இன்று (30ஆம் தேதி) ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இன்று சென்னையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் புகழாஞ்சலி விழா நடப்பதால், இன்று ஸ்டாலின் பங்கேற்க இயலாது என்று ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அதையடுத்து, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி குமரகுரு, வரும் செப்டம்பர் 24ம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.