ஆசிரியர்கள் இன்றி சீரழிந்து வரும் கல்லூரிக் கல்வித் தரம்- ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கல்வி தரம் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Ramadoss

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 1883 கவுரவ விரிவுரையாளர்களை அடுத்த 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில் அந்த இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய பணியிடங்களைச் சேர்க்காமல் 9 ஆயிரத்திற்கும் அதிகமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2640 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு பிறப்பித்த ஆணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் அரசு கல்லூரிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும்.

ஆனால், ஆண்டுக்கு ஆண்டு குறைந்த ஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமர்த்தும் தமிழக அரசு, மீதமுள்ள கணிசமான பணியிடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருக்கிறது. இப்போதும் கூட அரசு கல்லூரிகளில் 2640 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதற்கு இணையான எண்ணிக்கையில் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும்படி கல்லூரி கல்வி இயக்குனர் பரிந்துரைத்த நிலையில், 1883 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க மட்டுமே ஆணையிடப்பட்டுள்ளது.

இவை தவிர கணக்கில் கொண்டுவரப்படாத காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. 2011-ஆம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து 2015-16ஆம் ஆண்டு வரை 953 புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை கற்பிப்பதற்காக 1924 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் நடப்பாண்டில் 263 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அவற்றை கையாளுவதற்காக 693 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 270 பணியிடங்கள் நடப்பாண்டிலேயே நிரப்பப்பட வேண்டும்.

இவை அனைத்தையும் கணக்கில் சேர்த்தால், 2640 காலியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட 2617 பணியிடங்கள் என மொத்தம் 5257 காலியிடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 2015-ஆம் ஆண்டில்1010 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இவை கூட 2012-13 ஆம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட புதிய பணியிடங்கள் மட்டுமே. மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Universities

2013-14 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஏற்படுத்தப்பட்ட 1607 புதிய பணியிடங்கள், 2640 காலியிடங்கள் என 4247 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இன்னும் நிரப்பபடவில்லை. நடப்பாண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 693 பணியிடங்களில் 423 இடங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நிரப்பிக் கொள்ள முடியும் என்பதால், அவற்றை கழித்தாலும் கூட கிட்டத்தட்ட 3800 காலியிடங்கள் உள்ளன. இவை அரசு கல்லூரிகளின் ஒட்டுமொத்த பணியிடங்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். 30% காலியிடங்களை வைத்துக் கொண்டு அரசு கல்லூரிகளில் எப்படி தரமான கல்வி தர முடியும்?

அரசு கல்லூரிகளில் 1883 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் கூட உயர்கல்விச் சீரழிவை தடுக்க முடியாது. கவுரவ விரிவுரையாளர்கள் திறமையானவர்கள், கடமை உணர்வு கொண்டவர்கள் என்றாலும் கூட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவர்களால் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப முடியாது. பணி நிலைப்புப் பெற்ற ஒரு பேராசிரியர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4 பாடவேளைகள் பாடம் நடத்த வேண்டியிருந்தால், கவுரவ விரிவுரையாளர்கள்7 அல்லது 8 பாட வேளைகள் பாடம் நடத்தும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் கற்பித்தல் தரம் பலி கொடுக்கப்படுகிறது.

காலியிடங்கள் அனைத்தையும் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் மூலம் நிரப்பினால் மட்டும் தான் கல்லூரிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும். கவுரவ விரிவுரையாளர்களையே தகுதி அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதன் மூலம் கல்வித் தரத்தை உயர்த்த முடியும். ஆனால், அதை செய்ய அரசு தயங்குகிறது. 2011-ம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இரண்டாவது முறை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்வதன் மூலம் காலியிடங்களை நிரப்புதல், கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் ஆகிய இரு வெற்றிகளை ஒரே நேரத்தில் பெற முடியும். ஆனால், அவ்வாறு செய்ய அரசு தயாராக இல்லை என்பது தான் உண்மை.

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த நிலையை மாற்றி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!