குட்கா விவகாரம் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வெளியிட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கை விபரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளது.
குட்கா முறைகேடு விவகாரத்தில் மௌனத்தை கலைத்த முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், "குட்கா விவகாரத்தில் பணம் பெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் நான் கமிஷனராக பதவியில் இல்லை.
எம்.எல்.ஏ. அன்பழகன் அளித்த புகார் தேதிகளில் நான் சென்னை கமிஷனராக இல்லை. சிபிஐ வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை."
"என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை." என்றார். பின்னர் 2011 முதல் 2015 வரை குட்கா விவகாரம் நடந்த போது பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பெயர் பட்டியல் மற்றும் விவரங்களை ஜார்ஜ் வெளியிட்டார்.
அதில், கூடுதல் ஆணையர்களான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர், ரவிகுமார், கருணாசாகர், சேஷ சாயி ஆகியோர், துணை ஆணையர்கள் ராஜேந்திரன், லட்சுமி, புகழேந்தி, ராமகிருஷ்ணன், விமலா மற்றும் உதவி ஆணையர்கள் கந்தசாமி, மன்னார் மன்னன், ஆறுமுகம் உள்ளிட்டோர் ஆய்வாளர்கள், ஷியாம் வின்சென்ட், ஆபிரகாம், மாதேஸ்வரன், கருணாகரன், சம்பத், சுரேந்தர் ஆகியோர் பணிபுரிந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பட்டியலை தருமாறு முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜிடம் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பட்டியலில் உள்ள அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.