திருச்சி முக்கொம்பு மேலணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான தடுப்பணை, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி, அதிகபட்ச வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்தது.
அதையடுத்து, 24ஆம் தேதி முதல், தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி துவங்கியது. 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக மணல் மூட்டைகளை அடுக்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பாறாங்கற்கள் கொட்டப்பட்டு, தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, 25 ஆயிரம் கன அடி நீர் வந்தால் உடைந்துவிடும் என்றும் வலுவான தடுப்பணையை ஏற்படுத்த வேண்டும்.கடைமடை வரை தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில், முக்கொம்பு மேலணை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததையடுத்து, போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பி.ஆர். பாண்டியன், தஞ்சாவூர் அருகே கைது செய்யப்பட்டார். மேலும், முக்கொம்பு மேலணை முன்பு போராட்டம் நடத்த வந்த விவசாயிகள், 36 பேரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.