சென்னை மாதவரத்தில் நடந்த என்கவுன்டரில் ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் அவ்வப்போது ஒரு பெரிய தாதா உருவாகி, அடியாட்களை கொண்டு கொலை, பணம்பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் காவல் துறையில் உள்ள சிலரே ரவுடிகளுக்கு உதவுவதால், அந்த ரவுடிகள் பணம் சேர்த்து ஒரு கட்டத்தில் தாதாவாக உருவாகின்றனர். பின்னர், அவர்களே காவல்துறையினரையும் குறிவைத்து தாக்கும் போது காவல் துறையினர், என்கவுன்டரில் இறங்குகின்றனர்.
குன்றத்தூர், ஒரகடம் பகுதிகளில் பெரிய கம்பெனிகளில் பணம் வசூலிப்பது உள்பட பல மிரட்டல்கள், கொலைகள் உள்ளிட்ட குற்றங்களி்ல் ஈடுபட்டு வந்த குன்றத்தூர் வைரம் என்ற ரவுடி, கடந்த 2 ஆண்டுகளாக அந்த தொழிலை விட்டு விட்டு வழக்குகளுக்கு அலைந்து வந்தார்.
இந்நிலையில் வைரத்தின் சகோதரி மகனான கதிர் மற்றும் அவனது கூட்டாளி வல்லரசு ஆகியோர் வடசென்னையில் குற்றங்கள் புரிந்து பெரிய ரவுடிகளாக வலம் வந்தனர். இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குகளே நிலுவையில் உள்ளன. அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து காவல் துறையினர் தேடி வந்தனர். இருவரும் தங்கள் கூட்டாளிகளுடன் வியாசர்பாடி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எம்கேபி நகர் பிஎஸ்என்எல் குடியிருப்புப் பகுதிக்கு சென்ற காவல்துறையினருக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது
இதில் ரவுடி வல்லரசு தன்னிடம் இருந்து அரிவாளால், எம்கேபி நகர் காவலர் பவுன்ராசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினான். இதனையடுத்து வியாசர்பாடி காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மற்றும் புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உடனடியாக ரவுடிகளை தேடும் பணி துவக்கப்பட்டது. அச்சமயம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரவுடிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு தனிப்படையினர் சென்றனர். அவர்களை பார்த்ததும் ரவுடிகள் திடீரென தாக்கத் தொடங்கினர்.
இதில் காவலர்கள் தீபன் மற்றும் பிரேம் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசுவை இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மார்பில் இரண்டு குண்டுகளும், கால் பகுதியில் ஒரு குண்டு பாய்ந்ததில் வல்லரசு அந்த இடத்திலேயே இறந்தார். வல்லரசு ரவுடி சுட்டுக்கொலை என்று தெரிந்ததும் மற்ற ரவுடிகள் தப்பி ஓடியுள்ளனர். உயிரிழந்த ரவுடி வல்லரசு உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலையில் 28 தையல்கள் போடப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காவலர் பவுன்ராசை கூடுதல் ஆணையர் தினகரன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பவுன்ராஜ், அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.