கனமழையால் வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மறுநாளோ பெங்களூருவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வேண்டும். என்ன செய்வதென்று தவியாய் தவித்த வீரர், தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
வெள்ளத்தில் கர்நாடக மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெலகாவி மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தின் உள்ள மன்னூர் என்னும் சிறு கிராமத்தைச் சேர்ந்த மனோகர் என்ற விவசாயியின் மகன் நிஷான். 19 வயதான இந்த இளைஞர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். குத்துச்சண்டையில் ஆர்வமுடைய நிஷான், கடந்த 2 வருடங்களாக அர்ஜுனா விருது பெற்ற வீரரான கேப்டன் முகுந்த் என்பவருடைய அகாடமியில் குத்துச்சண்டை பயிற்சியும் எடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி பெங்களூருவில் தொடங்க இருந்த மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதற்காக 7-ந் தேதி இரவு பெலகாவியில் இருந்து அம் மாவட்ட வீரர்கள் சிலருடன் ரயில் மூலம் பெங்களுரு செல்லவும் திட்டமிட்டிருந்தார். அதற்காக வீட்டிலிருந்து கிளம்பவும் தயார் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் தான் அப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நிஷானின் வீட்டைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்தது.சில மணி நேரங்களிலேயே கட்டுக் கடங்காத வெள்ளத்தால் அவருடைய ஊரே தீவானது. சாலைகளும், பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பெலகாவிக்கு சென்று, பெங்களூரு ரயிலை பிடிக்க முடியுமா? என்ற துக்கம் நிஷாந்தை கவ்வியது.
இந்நிலையில், எப்படியாவது போட்டியில் பங்கேற்றே ஆவது என்று தீர்மானித்த நிஷான், வெள்ள நீரில் நீச்சலடித்து கரை சேர முடிவு செய்தார். தனது குத்துச்சண்டை போட்டிக்கான உபகரணங்கள் அடங்கிய கிட் பாக்ஸை தண்ணீர் புகாத அளவுக்கு பத்திரமாக பிளாஸ்டிக் பையில் இறுக கட்டினார். அதனை தனது முதுகில் கட்டிக் கொண்டு, உதவிக்கு தனது தந்தையும் அழைத்துக் கொண்டு தலைக்கு மேல் ஓடிய வெள்ளத்தில் குதித்தார். சுமார் 2.5 கி.மீ. தூரத்தை கிட்டத்தட்ட 45 நிமிடங்களில் எதிர் நீச்சல் போட்டு கடந்த இருவரும் பத்திரமான பகுதியை அடைந்தனர்.
பின்னர் தன் குழுவினருடன் இணைந்த நிஷான், ஒரு வழியாக பெங்களூரு சென்றடைந்தார்.குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று நாட்களாக அடுத்தடுத்து சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பாரத் என்ற வீரருடன் மோதியதில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.
இந்த வெற்றி குறித்து நிஷான் கூறுகையில், போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வெறி தான், தலைக்கு மேல் சென்ற வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் எதிர் நீச்சல் போட்டேன். அதற்கான பலன் கிடைத்தும் விட்டது. அடுத்த முறை சாம்பியன் பட்டம் கட்டாயம் வெல்வேன் என்று சந்தோஷத்தில் குதித்தார். நிஷானின் பயிற்சியாளர், மற்றும் பெலகாவி அணி குத்துச்சண்டை வீரர்களும் நிஷானின் தைரியத்தையும், துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.