இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...

by எஸ். எம். கணபதி, Aug 12, 2019, 12:22 PM IST

மும்பையில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அவிச்ச முட்டைகளுக்கு ரூ.1700 பில் போட்டிருக்கிறார்கள். அந்த தண்டத்தொகையை கொடுத்த ட்விட்டர் வாசகர், பில்லை ட்விட்டரில் போட்டு தாக்கியுள்ளார்.

சில ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் காபி, டீ விலை கூட அநியாய விலையாக இருக்கும். அவ்வளவு ஏன், விமான நிலைய ஷாப் ஒன்றில் காபிக்கு ரூ.250 என்று பில் போட்டதைப் பார்த்து, முன்னாள் ‘நிதி’ அமைச்சர் ப.சிதம்பரமே பதறிப் போய் சமூக ஊடகங்களில் கொதித்ததைப் பார்த்திருக்கிறோம்.

இந்த வரிசையில் மும்பையில் போர் சீசன்ஸ்(Four seasons) ஓட்டலில் இரண்டு அவிச்ச முட்டைக்கு ரூ.1700 பில் போட்டிருக்கிறார்கள். அந்த அநியாய விலைக்கு முட்டையை சாப்பிட்ட வாடிக்கையாளர் கார்த்திக்கு தார் என்பவர், அதற்கான பில்லை ட்விட்டரில் போட்டுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ், இதே போல் ஒரு ஓட்டலில் அநியாய விலைக்கு வாழைப்பழம் சாப்பிட்டதை ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

சண்டிகரில் ஜே.டபிள்யூ.மரியாட் என்ற ஓட்டலில்தான், இரண்டு வாழைப்பழங்களுக்கு ரூ.442 என்று வசூலித்திருந்தனர். இந்த பில்லை நடிகர் ராகுல் போஸ், ட்விட்டரில் வெளியிட்டார். ஆனால், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சம்மேளனம், ‘இதில் ஒன்றும் தவறில்லை’ என்று விளக்கம் கொடுத்தது. ஆனால், சண்டிகரில் கலால் வரித் துறை அதிகாரிகள், அந்த ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்கள். காரணம், வாழைப்பழத்திற்கு விதிகளை மீறி ஜி.எஸ்.டி. வசூலித்ததற்குத்தான்.

இந்நிலையில், கார்த்திக் தார் தான் அவிச்ச முட்டைக்கு அநியாய விலை கொடுத்ததை ட்விட்டரில் வெளியிட்டதுடன், ‘‘நாம் இதை எதிர்த்து போராடலாமா?’’ என்று ராகுல் போஸுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.


More District news News