கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உயர்ந்துள்ளது. இன்றும் நீர்வரத்து கூடுதலாக இருப்பதால் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந் நிலையில், கர்நாடகாவில் கனமழை ஓய்வு எடுத்ததால் அணைகளில் நீர் திறப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 5 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்க, அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் கடந்த 4 நாட்களாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்றிரவு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு காவிரியில் வெள்ளமாக பெருக்கெடுத்து நீர் சீறிப் பாய்ந்து வருகிறது.
இந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 உயர்ந்து இன்று காலை 82.62 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவும் 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சி.,யாக உள்ளது. இன்றும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேற்றிரவு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த நீர் வந்து சேரும் பட்சத்தில் நாளை இரவுக்குள் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை, நேற்று மாலை ஓய்வெடுத்துள்ளது. இதனால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவு வரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட 3 லட்சம் கனஅடி நீர் இன்னும் 3 நாட்கள் வரை மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 1.85 கன அடியாக உள்ளது.
அதிக நீர் வரத்தான் எதிர்பார்த்ததை விட மேட்டூர் அணை முன்கூட்டியே நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையில் உபரி நீரை திறந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க, டெல்டா பாசனத்திற்காக உடனே தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.