மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்து இழிவாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவை வரலாறு மன்னிக்காது என அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் அதிமுக அரசின் மீது ஏற்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டுகளை முன் வைத்து சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மு.க தமிழரசு, எம்.எல்.ஏ., குக செல்வம், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு பேசிய ஜெ.அன்பழகன், தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கடற்கரையில் நினைவிடம் அமைக்க முறையாக மனு அளித்தோம். அரசு வழங்காத நிலையில் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்ற பின் அடக்கம் செய்தோம்."
"இந்த விசயத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இழிவாக பேசியிருக்கிறார். அவரை வரலாறு மன்னிக்காது. குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக வழக்கு தொடர்வோம்." எனக் கூறினார்.
" ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பாக, ரூ.56 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டதில், பலருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இது வருவதால், திமுக ஆட்சிக்கு வந்த பின், கண்டிப்பாக வழக்கு தொடர்வேன்" என எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.