பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் சனிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை அவதூறாகப் பேசியதாக வீடியோ வெளியானது.
இந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, எச்.ராஜாவின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில், எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம், நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு முன், ஆஜரான வழக்கறிஞர் சூர்ய பிரகாசம், எச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என முறையிட்டார்.
இந்த முறையீட்டை நிராகரித்த, நீதிபதி செல்வம், எச்.ராஜா மீது அவதூறு வழக்கு தான் எடுக்க முடியும் என கருத்து கூறினார். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும், வழக்கறிஞர் சூர்ய பிரகாசத்துக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.