பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, அற்புதம்மாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தார். பின்னர் பேசிய அவர்,
"கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த என்னுடைய மகன் பேரறிவாளன் நிலைமை குறித்தும், தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளேன்."
"அதில், கே.டி.தாமஸ் உள்ளிட்டவர்களின் தீர்ப்பு குறித்த தகவல், கிருஷ்ணய்யரின் புத்தகம், போன்ற பல்வேறு தகவல்களை ஆளுநரிடம் அளித்தேன். பேரறிவாளனுக்கு நன்னடத்தை காரணமாக வழங்கப்பட்ட பரோல் குறித்தும் அவரிடத்தில் மொழிபெயர்ப்பாளர் மூலம் எடுத்துக்கூறினேன்."
"அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ஆளுநர், எனது மனுவை முழுவதுமாக படித்தார்...அதில் இருந்த தவறையும் சுட்டிக்காட்டினார், நானும் அதனை திருத்தி அளித்தேன்"
"எதிர்ப்பு என்பது இழப்பீட்டை நோக்கியே செல்கிறது. அப்படி பார்த்தால் நாங்கள் 28 வருடமாக அனுபவித்த துன்பத்திற்கு எனக்கும் மகனுக்கும் என்ன இழப்பீடு தரப்போகிறார்கள், எதிர்ப்பவர்களை பற்றி பேச வேண்டாம்.அமைச்சரவைக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் மரியாதை அளித்து ஆளுநர் விரைவில் நல்லமுறையில் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.