சென்னையில் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.டி.வி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் 31 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது. அதன், நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையிலும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மரபு அடிப்படையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 31மாவட்டங்களிலும் நடைபெற்ற நூற்றாண்டு விழா கூட்டத்திலும் கட்சி பாகுபாடின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையிலும் சென்னையை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.