திருவையாறு சட்டமன்றத் தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.கவின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா "மத்திய அரசு 51 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. காரைக்காலில் கடலுக்கு அடியில்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. அப்படி இருக்கும்போது விவசாயம் எப்படி பாதிக்கப்படும். தமிழகத்தில் இருப்பவர்கள் எல்லாம் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்" என்றார்.
"இஸ்ரேல் நாட்டின் முழு எரிசக்தித் தேவையும் ஹைட்ரோ கார்பனில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது. உலக அளவில் அந்த நாடு விவசாயத்தில் முன்னோடியாகவும் விளங்கி வருகிறது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் இஸ்ரேல் என்ன பாலைவனமாக மாறிவிட்டதா? இங்கு பகுத்தறிவு பேசிக்கொண்டு மூட நம்பிக்கையைப் பரப்புகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்றார்.
மேலும் "மோடி அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயன் அடைந்துள்ளார்கள். சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி என்ற தீர்ப்பு மக்கள் மனதில்கொந்தளிப்பை ஏற்படுத்தியது" என்றும் கூறினார்.