மீ டூ இயக்கத்தைக் கேலி செய்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக் கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் மீ டூ இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர். இதில் திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
பரப்பரப்பாக அடுத்தடுத்த குற்றசாட்டுகளை உலக நாடுகளிலும் இந்தியாவில் பெண்கள் தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற இடைக்கால தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட டிரம்ப் பேசுகையில், பென்சில்வேனியாவில் குடியரசுக் கட்சியினர் நீண்ட காலமாக வெற்றி பெறவில்லை.
ஆனால் ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் தாங்கள் வெல்லப் போவதாக நினைத்துக் கொள்வார்கள். அதைச் சொல்வதற்கு ஒரு சொற்றொடர் இருக்கிறது. அன்புக்குரியவர்களின் பிரிவைச் சொல்லும் சொற்றொடர் அது.
ஆனால் மீடூ இயக்க விதிகளின் காரணமாக அதை நான் சொல்ல மாட்டேன். சொல்லாமல் எனக்கு நானே தணிக்கை செய்து கொள்கிறேன். அதனால் தி பெர்சன் காட் அவே என்று சொல்கிறேன் என்றார் டிரம்ப். கேர்ள் என்று சொன்னாலே மீ டூ இயக்கத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பர் எனப் பொருள்படும் வகையில் டிரம்ப் பேசியதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமெரிக்க நீதிபதி பிரெட் கேவனோவுக்கு முக்கிய செனட் உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் அவரின் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. நீதிபதியாக பிரெட் கேவனோவை அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிறுத்தியது குறிப்பிடதக்கது.